இந்திய மருத்துவத்துறை புதிய சாதனை: ட்ரோன் மூலம் தடுப்பு மருந்து சப்ளை..!

 
Vaccine-delivery

மணிப்பூர் மாநிலம் லோக் டாக் ஏரியில் உள்ள மிதக்கும் தீவுகள் பகுதிக்கு, உரிய நேரத்திற்கு ட்ரோன் மூலமாக தடுப்பு மருந்தை கொண்டு சேர்த்து இந்திய மருத்துவத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததையடுத்து, முழு வீச்சில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. இதையடுத்து, ஒரே நாளில் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விமானம், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கும் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் சில நேரங்களில், குறிப்பிட்ட நேரத்திற்கு மருந்தை கொண்டு சேர்க்க முடியாத நிலை இருந்தது.

Vaccine-delivery

இதனிடையே, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலமாக தடுப்பு மருந்தை விநியோகிப்பது நடைமுறையில் சாத்தியப்படுமா என்று நீண்டகாலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த இந்திய மருத்துவத்துறை விஞ்ஞானிகள் தற்போது அதை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

சோதனை முயற்சியாக, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள லோக் டாக் ஏரியில் உள்ள மிதக்கும் தீவுகள் எனப்படும் பகுதிக்கு, ட்ரோன் மூலமாக தடுப்பு மருந்து உரிய நேரத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு தெற்காசிய நாடும் ட்ரோன் மூலம் தடுப்பு மருந்து கொண்டு செல்லும் முறையை பரிசோதித்துப் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவத்துறையின் இந்த புதிய முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

From around the web