ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா திடீர் சந்திப்பு

 
Yediyurappa

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், அண்மையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, இந்த பிரச்சினையில் ஒன்றிய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபட தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று  நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக அரசின்  மேகதாது திட்டத்திற்கு இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

ஆனால் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நாங்கள் மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம்; குடிநீர் முக்கிய தேவையாக இருப்பதால் அணை கட்ட கர்நாடகாவுக்கு  உரிமை உண்டு. அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். கர்நாடகாவுக்கு இந்திய அரசு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்தார். பெங்களூருவில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

ஒன்றிய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் இன்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள சட்டமன்ற வளாகத்தில்  ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நீர்வளத்துறை அமைச்சர் மாதுசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் அமல்படுத்தப்பட உள்ள முக்கிய நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

From around the web