பாஜகவில் இணைந்தது பெரிய குற்றம்... மொட்டையடித்து கட்சியிலிருந்து விலகிய திரிபுரா எம்.எல்.ஏ!!

 
Ashish-Das

திரிபுராவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மொட்டையடித்து அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

திரிபுரா மாநிலம், சூர்மா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர். இவர் தொடர்ச்சியாக மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

இந்த நிலையில்  இவர் மேற்குவங்காள மாநிலம்  சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள ஒரு கோவிலுக்குச் சென்ற ஆஷிஷ் தாஸ் மொட்டையடித்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “பாஜக நாடு முழுவதையும் விழுங்குகிறது. நான் பாஜகவின் ஒரு பகுதியாக மாறியதன் மூலம் ஒரு குற்றத்தை செய்ததாக உணர்கிறேன். இது நான் செய்த தவறு. நான் காளி  கோவிலில் பூஜை செய்தேன். பாஜகவில் இணைந்தது பெரிய குற்றம். இந்த தவறுக்கு பிராயச்சித்தமாகவே நான் மொட்டை அடித்துக் கொண்டேன். இந்த தீய சக்தியை அழிக்க நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். மேலும் பாஜகவில் இருந்து நான் விலகுகிறேன். அடுத்தடுத்து மற்ற எம்.எல்.ஏக்களும் விலகுவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து அக்கட்சியுடன் பேசி வருகிறேன்” என  கூறினார்.

திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே கட்சியில் சேர்ந்தது தவறு என அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web