உ.பி.யில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி சாத்தியமா? முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்குச் செல்வாரா?

 
Stalin-Soniya

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்திரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உ.பி.யில் மட்டும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாபில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருக்கும் நிலையில், மம்தா பானர்ஜியை களத்தில் இறக்கியுள்ளார் பிரஷாந்த் கிஷோர். மம்தா பானர்ஜியின் கட்சி வாக்குகளைப் பிரிக்குமா? அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தரகாண்டில் பாஜகவிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நேரடிப் போட்டி என்பதால், அதிருப்தி வாக்குகளாலேயே காங்கிரஸ் கட்சி எளிதில் வெற்றிபெற முடியும் என கணிக்கப்படுகிறது.

சிறிய மாநிலமான மணிப்பூர், கோவா குறித்து அதிகம் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியாகவேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. அங்கே மாயாவதியின் பகுகுண் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தனித்தனியே போட்டியிடுவதால் 4 முனைப் போட்டி எழுந்துள்ளது. இது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புகிறார். ஐக்கிய  முன்னணியில் இது வரையிலும் இடம் பெறாத ஒடிசா மாநில பிஜு ஜனதா தளம், தெலங்கானா மாநிலத்தின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைய வேண்டும் என்றும் ஸ்டாலின் விரும்புகிறார்.

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகரராவிடம் இது குறித்து நீண்ட ஆலோசனை மேற்கொண்டு அவருடைய சம்மதத்தையும் பெற்றுவிட்டார் ஸ்டாலின் என்று கூறப்படுகிறது. நவீன் பட்நாயக்கை ஐக்கிய முன்னணியில் சேர்க்கும் பணியும் திரைமறைவில் நடந்து வருவதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த முன்னாள் ஐஏஸ் அதிகாரியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச சட்டமன்றத்தேர்தலில் பாஜவை  தோற்கடித்தால் தான் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முன்னணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால் அது குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது. பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தங்கள் பலத்தை நிருபித்து விட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க ஏதுவாக இருக்கும் என்று மாநில நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில்  தான் சமாஜ்வாடி கட்சிக்குப் பிரச்சனை இருப்பதாகவும், காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகளைத் தர அகிலேஷ் யாதவுக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் ஒரணிக்குள் கொண்டு வந்து விட்டால் பாஜகவை தோற்கடிப்பது எளிது என்பதை இரு தரப்பினரும் உணர்ந்தே உள்ளனர். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதில் தான் சிக்கல். இங்கு தான் முதலமைச்சர் ஸ்டாலினின் பங்கு அவசியமாகி

27 சதவீத இட ஒதுக்கீட்டில் வட இந்தியாவில் ஸ்டாலினுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு வடக்கிலும் தெரியத் தொடங்கியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலன் என்ற பட்டத்துடன் வட இந்தியாவில் ஒரு வலம் வரலாமே என்ற ஆலோசனையும் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளதாம். ஆனால், தன்னுடைய பங்களிப்பு இருக்கும் தேர்தலில் தங்களுடைய அணி வெற்றி பெற்றால் தான் தனக்கு மரியாதை என்று கருதுகிறார் ஸ்டாலின். திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் ஸ்டாலின், வடக்கில் சறுக்கிவிடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாராம்.

காங்கிரஸ் - சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கு திரைமறைவில் ஸ்டாலின் சார்பில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த முயற்சி வெற்றி பெற்றால் பஞ்சாப், உத்திரகாண்ட், உத்தரப்பிரதேசம் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வைகோ, திருமாவளவன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் பெரியார் சிந்தனைகள் வடக்கிலும் ஓங்கி ஒலிக்கும் என்று நம்பலாம்.

- மணி  

From around the web