மோடி கூறியிருந்தால்.. வழியில் இருந்து விலகி இருப்போம்...  விவசாயிகள் விளக்கம்

 
If-Modi-had-said-we-would-have-got-out-of-the-way

பிரதமர் மோடி யாரையாவது அனுப்பி வைத்து வழிவிட அறிவுறுத்தியிருந்தால் அவரது பாதையில் தடையாக இருந்திருக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு நேற்று முன்தினம் 42,750 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க இருந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டார்.

அவர் பெரோஸ்பூர் மாவட்டம், உசைனிவாலாவில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடாகி இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக பயண திட்டம் அதிரடியாக மாற்றப்பட்டது. அதன்படி அவர் சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் சென்றது.

ஆனால் வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் நிறுத்தப்பட்டது. வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலையில் மாற்றம் இல்லை. இதனால் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி கூறியிருந்தால், பாதையில் இருந்து விலகியிருப்போம் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் விவசாயிகள் அளித்துள்ள விளக்கத்தில், சாலை மறியல் தொடங்கி 20 நிமிடங்களுக்குப் பிறகு பிரதமரின் வருகை குறித்து அறிவிக்கப்பட்டதால், போராட்டக்காரர்களை திசை திருப்ப முயற்சிப்பதாக கருதி அதை நம்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி யாரையாவது அனுப்பி வைத்து வழிவிட அறிவுறுத்தியிருந்தால் அவரது பாதையில் தடையாக இருந்திருக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். அதே போல போராட்டம் நடத்துவதற்கு போலீசார் முன்னதாகவே அனுமதி வழங்கியிருந்தால் சாலை மறியலில் ஈடுபடும் நிலைக்கு சென்றிருக்க மாட்டோம் எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

From around the web