மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை... சாலைகளில் வெள்ளப் பெருக்கு... ரயில் சேவை பாதிப்பு

 
Mumbai

மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது.  

வழக்கமாக ஜூன் பத்தாம் நாள் பருவமழை தொடங்கும் என்றும், இந்த ஆண்டு ஒருநாள் முன்கூட்டித் தொடங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை, தானே பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மும்பை கொலாபாவில் 8 செ.மீ., சாந்தாகுரூசில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பிரீச்கேண்டி மருத்துவமனை அருகே மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தது. முழங்காலளவு நீரில் வாகனங்கள் சென்றன. மாதுங்கா கிங்ஸ் சர்க்கிள் என்னுமிடத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் மெதுவாகச் சென்றன.

தாதர், தாராவி, சயான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளிலும் தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

மும்பை உள்ளூர் ரெயில் சேவைகள் இன்று காலை பல வழித்தடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. குர்லா மற்றும் சியோன் நிலையங்களுக்கு இடையில் ரெயில் தண்டாவாள்த்தில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால்  குர்லா மற்றும் சிஎஸ்எம்டிக்கு இடையிலான மும்பை உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில்வே சிபிஆர்ஓ தெரிவித்துள்ளது.

எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல்  இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 9.50 மணிக்கு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தண்ணீர் குறைந்தவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று மத்திய ரயில்வே சிபிஆர்ஓ தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு மற்ற பிரிவுகளில் உள்ளூர் ரெயில் சேவைகள் இயங்கி வருகின்றன.

வானிலை மைய  கணிப்புகளின்படி, ஜூன் 9 முதல் ஜூன் 12 வரை மும்பை, தானே, ராய்காட் மற்றும் கொங்கன் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையின் பல்வேறு பகுதிகளும் அதன் புறநகர்ப் பகுதிகளும் மழை பெய்யும் என கூறி உள்ளதால். மழைக்கால முன் ஏற்பாடுகள் குறித்து பிரஹன் மும்பை கார்ப்பரேஷன் (பிஎம்சி) அவசர கூட்டத்தை நடத்தியது.

From around the web