மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை - டெல்லி முதல்வர் எச்சரிக்கை

 
மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை - டெல்லி முதல்வர் எச்சரிக்கை

கொரோனா மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பரவல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர், “டெல்லியில் அதிகரித்து வரும் இந்த கொரோனா தொற்று அதிகரிப்புதான் தலைநகரின் அதிகபட்ச கொரோனா தொற்று பாதிப்பா எனத் தெரியவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 24 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்காத ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் குறைந்த எண்ணிக்கையிலான ஐ.சி.யு படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று எச்சரித்தார்.

From around the web