பசுவின் கோமியம், சாணம் தான் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும்: மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு!

 
Shivraj-Singh-Chouhan

பசுவின் கோமியம், சாணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்நடைப் பராமரிப்பு கூட்டமைப்பு சார்பில் போபால் நகரில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் ஒன்றிய கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை அமைச்சர் ரூபாலா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது, “பசுவின் கோமியம், பசுவின் சாணம் ஆகியவற்றின் மூலம் ஒருவரின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் , நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும்.

மத்திய பிரதேச அரசு இரு பசு காப்பகங்களையும், பாதுகாப்பு, பராமரிப்பு இடங்களையும் உருவாக்கியுள்ளது. ஆனால், மத்தியப்பிரதேச அரசு மட்டும் தனித்து செயல்பட முடியாது, சமூகத்தின் பங்களிப்பும் அவசியம்.

நாம் விரும்பினால் நம்முடைய சொந்தப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும், நாட்டின் பொருளாதாரத்தையும் பசுவின் மூலம் வலுப்படுத்த முடியும். உடல்கள் எரியூட்டும் இடங்களில்கூட விறகுகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட வரட்டிகளைப் பயன்படுத்தலாம், இதன் மூலம் மரக்கட்டைகளைப் பயன்படுத்துவது குறையும்.

சிறு விவசாயிகள், கால்நடை உரிமையாளர்களுக்கு எவ்வாறு கால்நடை வளர்ப்பு லாபமான தொழிலாக மாற்றலாம் என்பது குறித்து கால்நடைதுறை மருத்துவர்கள், வல்லுநர்கள் தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்தார்

ஒன்றிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா கூறுகையில், “குஜராத்தில் உள்ள கிராமங்களில் ஏராளமான பெண்கள் மாடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிகரமாக லாபமீட்டி வருகிறார்கள். கால்நடைத்துறை படிப்பு படித்தவர்கள் இந்தத் துறையை லாபமானதாக மாற்ற உதவ மத்திய அ ரசும் உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்

From around the web