பாஜகவின் ரிமோட் கண்ட்ரோல் அரசியல் எடுபடாத மாநிலம்! எது தெரியுமா?

தத்தித்தத்தி கேரளாவில் அரசியல் நடை பயிலும் பாஜகவின் மாநில தலைவர் கே,சுரேந்திரன், 88 வயது இளைஞர் மெட்ரோமென் ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தார். கட்சியில் சேர்ந்த உடன் ஒருவருக்கு பதவி தருவது பூர்வீக பாஜக வழக்கம் இல்லை. முதல்வர் வேட்பாளர் தகுதி உள்ளவரை கட்சியின் மாநிலத் தலைவர் பதவி வரை வளர்த்து விடுவது ஆரோக்கியமான அரசியல் நடைமுறை.
கேரளா பாஜக விஜய யாத்திரையின்போது மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் இவ்வாறு அறிவித்தது பாஜக மேலிடத்துக்கு ரசிக்கவில்லை. உடனே மார்ச் 5 அன்று சுரேந்திரன் பின்வாங்கினார். முடிவில்லாத ஊழல், வளர்ச்சி இன்றி தேக்கநிலையில் இருந்து மீள கேரள மக்கள் ஸ்ரீதரன் போன்ற ஒருவரை எதிர்பார்க்கிறார்கள் ஆனால் இறுதி முடிவை பாஜக டெல்லி மேலிடம் தான் எடுக்கும் என மழுப்பிவிட்டார்.
மெட்ரோமேன் ஸ்ரீதரன் குறித்து பாஜக கேரள மாநில தலைவர் தெரிவித்துள்ள கருத்தை மத்திய இணை அமைச்சர் வி. முரளிதரன் ஆதரித்துள்ளார். மக்கள் கருத்தை தான் மாநிலத் தலைவர் கூறினார் என்று சப்பைக்கட்டு போடுகிறார் மத்திய அமைச்சர். இயல்பாகவே கேரள அரசியல் தலைவர்கள் மாநில விவகாரங்களில் கட்சியின் டெல்லி மேலிட தலையீட்டை அனுமதிப்பது இல்லை.
கேரள பாஜகவில் டெல்லி பாஜக மேலிடம் முதல்வர் வேட்பாளரை திணிப்பது எளிதல்ல. கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களும் சுதந்திரமாக செயல்படத்தான் விரும்புகிறார்கள். பாஜகவோ, காங்கிரஸோ கேரளாவில் மட்டும் டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் உத்தரவு போட முடியாது.
-வி.எச்,கே,ஹரிஹரன்