பிரதமர் மோடியின் நலனுக்காக.. பாஜக முதல்வர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை!!

 
BJP-ruling-states-prayers-for-PM

பிரதமர் மோடியின் நலனுக்காக பாஜக ஆளும் முதல்வர்கள் இன்று யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக நேற்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால்,போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15-20 நிமிடங்கள் அப்படியே நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்ற நிலையில், மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் செய்த பிரதமர், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியுள்ள நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்காக மகா மிருத்தியுஞ்சய மந்திரம் உச்சரிக்க போகிறேன் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

பிரதமரின் நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பிற்காக பிராத்திக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்க மகாகாலேஸ்வரர் மற்றும் ஓம்காரேஷ்வரர் உள்ளிட்ட பெரும் சிவாலயங்களில், பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக மகா மிருத்தியுஞ்சய மந்திரம் உச்சரிக்க, அம்மாநில பாஜகவினர் முடிவு செய்துள்ளனர். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்குரிய மகா மிருத்யுஞ்சய மந்திரம் மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதேபோன்று, பிரதமர் மோடியின் நலனுக்காக அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள உக்ரதாரா கோவிலில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா யாகம் வளர்த்து, பூஜை செய்து வழிபட்டுள்ளார்.  இதில், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

From around the web