கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மருந்தின் பார்முலா கேட்டு அதிகாரிகள் மிரட்டல்... நீதிமன்றத்தில் வைத்தியர் மனு

 
Andhra

கொரோனா தொற்றை குணப்படுத்தும் மூலிகை மருந்தின் பார்முலா கேட்டு அதிகாரிகள் மிரட்டுவதாக ஆந்திர உயிர்நீதிமன்றத்தில் நாட்டு வைத்தியர் ஆனந்தய்யா புகார் மனு அளித்துள்ளார்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ்ணப்பட்டிணம் முத்துக்கூறு கிராமத்தை சேர்ந்தவர் போனஜி ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் கொரோனா நோயாளிகளுக்காக மருந்து தயாரித்தார்.

இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டிணத்தில் குவிய தொடங்கினர்.

நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழு ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அந்த குழு அறிவித்தது.

எனினும் உரிய பரிசோதனைக்கு பிறகு மக்களுக்கு விநியோகிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது. இதன்பேரில் திருப்பதி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் அந்த மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருந்தை வாங்க கூட்டம் கூடுவதால் தொற்று மேலும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி மருந்து விநியோகத்தை ஆந்திர அரசு நிறுத்தியது. இதற்கு எதிராக சிலர் ஆந்திர உயிர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் உயிர்நீதிமன்றத்தில் ஆனந்தய்யா தாக்கல் செய்த புகார் மனுவில், “அரசு அதிகாரிகள் என்னை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று, கொரோனா மருந்து சூத்திரத்தை கூறும்படி மிரட்டுகின்றனர். நான் அந்த மருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தேன். மருந்தை ஆய்வு செய்வதாக கூறி அரசு தாமதப்படுத்துகிறது. அந்த மருந்தை விரைவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால், என்னால் முடிந்த அளவு மருந்து தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்குவேன்” என்று கூறியுள்ளார்.

From around the web