நீங்க ஆர்டர் செய்தால் மட்டும் போதும்... நாங்களே வீடு தேடி வரோம்!

 
Delhi

டெல்லியில் ஆன்லைன் வழியே ஆர்டர் செய்யும் மதுபானங்களை வீட்டிற்கே சென்று வினியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அமல்படுத்தியது.  இதனால், மருந்தகங்கள், பால் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்களிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு 50 சதவீதம் என்ற அளவிலேயே அனுமதி வழங்கப்பட்டது.  தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்ற தடை விதிக்கப்பட்டது. மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

இதேபோன்று மக்கள் ஓரிடத்தில் அதிகம் கூடுவது தவிர்க்கப்பட, மதுபான விற்பனைக்கும் அரசு தற்காலிக தடை விதித்தது.  இதனால், மதுபானங்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதியடைந்தனர்.

இந்நிலையில், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக டெல்லி அரசு ஆன்லைன் வழி மதுவிற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது.  இதன்படி, மதுபானம் வாங்க விரும்புவோர் வீட்டில் இருந்தபடியே, தங்களுடைய மொபைல் போனில் அதற்கான செயலியை கொண்டு அல்லது இணையதளம் வழியே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.

எனினும், எல்லா மதுபான கடைக்காரர்களும் மது விற்பனையில் ஈடுபட முடியாது. டெல்லி கலால் (திருத்தம்) விதிகள், 2021-ன்படி, மதுபான கடைக்காரர்கள் எல்-13 என்ற லைசென்ஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அவர்களே வீட்டிற்கு மதுபானம் வினியோகிக்க முடியும்.  அதுவும், மொபைல் செயலி அல்லது ஆன்லைன் வழியே ஆர்டர் செய்திருக்க வேண்டும்.  இதற்கேற்ப அவை மேம்படுத்தப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

இதேபோன்று, வீடுகளை தவிர, விடுதிகள், அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மதுபான வினியோகம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றும் டெல்லி அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

From around the web