காக்கிச் சட்டைக்குள் ஓர் கருணை உள்ளம்: முதியவருக்கு ரூ.1 லட்சம் வழங்கிய எஸ்பி..!

 
Abdul-Rahman

மர்ம நபர்களிடம் ஒரு லட்சம் ரூபாயை பறிகொடுத்த கடலை விற்று பிழைப்பு நடத்தும் முதியவருக்கு, தன் சொந்தப் பணத்தில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார் ஸ்ரீநகர் எஸ்பி.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் போரி கதால் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (வயது 90). சாலையோரம் கடலை விற்று பிழைப்பு நடத்தி வரும் இவர், அதில் கிடைக்கும் வருவாயில் தன்னுடைய இறுதிச் சடங்குக்காக சிறுக சிறுக சுமார் ஒரு லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்தார்.

கடந்த 13-ம் தேதி மாலை சில மர்ம நபர்கள், முதியவர் அப்துல் ரஹ்மானை மனிதநேயம் இல்லாமல் தாக்கி காயப்படுத்திவிட்டு, அவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். தன்னுடைய பணம் திருடு போனது குறித்து முதியவர் கதறிய காட்சியை வீடியோ எடுத்த யாரோ ஒருவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

Sandeep-Choudhary

அந்த வீடியோ, ஸ்ரீநகர் எஸ்பி சந்தீப் சவுத்ரி கண்களில் பட்டது. அந்த முதியவர் கதறிய காட்சி சந்தீப் சவுத்ரி கண்களை குளமாக்கியது. இதனால் மிகவும் வேதனையடைந்த அவர், அப்துல் ரஹ்மானுக்கு தன் சொந்தப் பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ரஹ்மான், சந்தீப் சவுத்ரிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Sandeep-AbdulRahman

இதுகுறித்து எஸ்பி சந்தீப் சவுத்ரி கூறுகையில், “நான் அவருடைய முகத்தைப் பார்த்தேன். அவருடைய இயலாமையைக் கண்டு வேதனை அடைந்தேன். பணம் ஒரு பிரச்னை அல்ல. மனிதர்கள் மற்றும் மனிதநேயமே எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது. இந்த நிலையில், அவரைக் கவனித்துக் கொள்ளவோ, உதவி செய்யவோ அவர் குடும்பத்தில் யாருமில்லை. எனவே, எனது சொந்தப் பணத்தில் அவருக்கு உதவினேன்” என்றார்.

இதற்கிடையில், முதியவர் அப்துல் ரஹ்மானை தாக்கி ஒரு லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web