கேரள பாஜகவில் 88 வயது இளைஞர்! முதலமைச்சர் ஆவாரா?

 
கேரள பாஜகவில் 88 வயது இளைஞர்! முதலமைச்சர் ஆவாரா?

என்ன தான் பணம் புகழ் இருந்தாலும் பதவி அதிகாரம் இவற்றில் கிடைக்கும் சுகமே தனி தான். வணங்கி வரவேற்கும் பரிவாரங்களுடன் நாட்டின் தலைநகரில் வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்தவர்களுக்கு எஞ்சிய காலமும் அதே மரியாதை அந்தஸ்துக்கான ஏக்கம் இருப்பது இயல்பு. டெல்லி மெட்ரோ ரயில் கார்பொரேஷன் முதன்மை ஆலோசகர் எழட்டுவலப்பில் ஸ்ரீதரன்  பாஜகவில் சேர்ந்துள்ளார்.

எதிர்வரும் கேரளா சட்டசபை தேர்தலில்  போட்டியிட அவருக்கு அம்மாநில பாஜக அழைப்பும் விடுத்துள்ளது. 88 வயது  இளைஞர் பொறியாளர்  இ. ஸ்ரீதரன் இது குறித்து பேசும்போது, “ அரசியலில் எனது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும்,கட்சி அனுமதித்தால் தேர்தலில் போட்டியிடுவேன்.கேரளாவில் குடியேறிவிட்டேன். ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி  ஜனநாயக முன்னணி  அரசுகளை பார்த்துவிட்டேன்,அவை மக்களுக்கு வேண்டியதை செய்யவில்லை.

நலத்திட்டங்கள் தாமதம் ஆகின. ஊழல் தலைவிரித்தாடியது, கூட்டணிக்கு தலைமை தாங்கிய கட்சிகள்  தான் பலனடைந்தன. மத்திய அரசுடன் இணக்கமான போக்கு இல்லை. எனவே மாநில நலன்கள் பாதிக்கப்பட்டன. கேரளா மாநிலத்தில் பாஜக அரசு அமைந்தால் நிலைமை சீராகும்,10 ஆண்டுகளுக்கு முன் சொந்த மாநிலம் கேரளாவிற்கு வந்தேன். நீலாம்பூர்  நஞ்சன்கூடு ரயில் பாதை, நகர்ப்புற ரயில் போக்குவரத்து, அதிவேக ரயில் திட்டம்  ஆகிய திட்டங்களில் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை.எனவே நான் ஒதுங்கி விட்டேன் என  தெரிவித்தார்.

திறமை, நேர்மை மட்டும் அரசியலுக்கு போதாது. அப்படி இருந்தால் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஐபிஎஸ் கதி தான் நேரிடும். நிபுணர்கள், அறிஞர்கள் வரவு அரசியலுக்கு தேவை தான். 75 வயதான தலைவர்களுக்கு கட்சி அரசியலில் இருந்து ஓய்வு தரும் பாஜக 88 வயதான பொறியாளரை மேலும் 5 ஆண்டுகள் பயன்படுத்தி கட்சியை வளர்க்க நம்புகிறது.

ஸ்ரீதரன் போன்ற நிபுணர்களின் ஆலோசனைகளை நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். முதியவர்கள் தொண்டர்களுடன்  தெருவில் இறங்கி வாக்காளர்களை  சந்திப்பது சிரமம். இன்றைய கட்சி இளைஞர்களிடம்  மூத்த கட்சிக்காரர்கள் மரியாதை எதிர்பார்க்க முடியாது. யோக்கியர் அறிவாளி என்பதற்காக மக்கள் ஒட்டு போட்ட காலம் மலையேறிவிட்டது. எனவே பொறியாளர் பெரியவர் ஸ்ரீதரன்  பாஜக சார்ப்பில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆகி மாநிலத்துக்கு சேவை செய்ய விரும்புவது படிக்கவும் கேட்டகவும்  மட்டுமே இனிக்கும்.

-வி.எச்.கே.ஹரிஹரன்

A1TamilNews