‘வாடி... போடி... வா, போ’ என மரியாதை குறைவாக நடத்தக்கூடாது; போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Kerala-Highcourt

சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில் குமார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன் அப்போது  வழிமறித்த சேர்தலா போலீசார் விசாரணை என்ற பெயரில், அவமரியாதையாக என்னை பேசினர்.

குறிப்பாக, என் மகளின் முன் 'எடா... வா, போ' என, மரியாதைக் குறைவாகவும் இழிவாகவும் பேசினர். பொது மக்களை கவுரவமாக நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் போலீசார் பொதுமக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பொதுமக்களை போலீசார் தரக்குறைவான வகையில் நடத்தக்கூடாது.

போலீசாரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும். பொதுமக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கேரள முழுவதும் போலீசார் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை 'வா, போ' என ஒருமையில் அழைத்து பேச கூடாது. 'எடா... எடீ...' மற்றும் 'வாடி... போடி' என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்கக்கூடாது.

இது தொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

From around the web