இசையால் ‘பிரம்மாண்டம்’ ஆக்கும் ‘இசைஞானி’ இளையராஜா!

ஹேராம் படம் ரிலீஸ் ஆக இருந்த சமயம். அதைப் பற்றி நிறைய சிறப்பு நிகழ்ச்சிகளை டிவியில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். DTS முறையில் வந்த முதல் படம் அதுதான் என நினைக்கிறேன். அதேபோல ஹங்கேரியில் அதன் பின்னணி இசைக்கோர்ப்பு நடந்ததாகவும் சொன்னார்கள். இப்படி ஏதேதோ அந்தப் படத்தைப் பற்றி கேட்டுக் கேட்டு அதை பார்த்தே ஆகவேண்டும் என மனதில் வெறி உண்டாகிவிட்டது. மதியம் பள்ளியை கட் அடித்துவிட்டு போய்வந்துவிடலாம் என ப்ளான் பண்ணி நானும் என் நண்பனும் போய்விட்டோம்.
 

இசையால் ‘பிரம்மாண்டம்’ ஆக்கும் ‘இசைஞானி’ இளையராஜா!ஹேராம் படம் ரிலீஸ் ஆக இருந்த சமயம். அதைப் பற்றி நிறைய சிறப்பு நிகழ்ச்சிகளை டிவியில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். DTS முறையில் வந்த முதல் படம் அதுதான் என நினைக்கிறேன். அதேபோல ஹங்கேரியில் அதன் பின்னணி இசைக்கோர்ப்பு நடந்ததாகவும் சொன்னார்கள். இப்படி ஏதேதோ அந்தப் படத்தைப் பற்றி கேட்டுக் கேட்டு அதை பார்த்தே ஆகவேண்டும் என மனதில் வெறி உண்டாகிவிட்டது.

மதியம் பள்ளியை கட் அடித்துவிட்டு போய்வந்துவிடலாம் என ப்ளான் பண்ணி நானும் என் நண்பனும் போய்விட்டோம். மதுரை அமிர்தம் தியேட்டர். திரையில் யாராவது பின்னாடி இருந்து கதவைத் திறந்தால் நமக்குப் பின்னால் இருந்து சத்தம் கேட்டது. இது இப்போது ரொம்பவும் பழகிய விஷயம். அப்போது அது அதிர்ச்சியைத் தந்த புதிய அனுபவம். ஏனெனில் நிஜமாகவே பின்னால் திரும்பிப் பார்த்தோம். 

படம் வாயைப்பிளக்க வைத்ததே தவிர மொழிப்பிரச்சினையால் பாதி புரியவில்லை. ராணி முகர்ஜீயில் இருந்து ஷாருக்கான்வரை சொந்தமாக தமிழ்பேசி உயிரை வாங்கினார்கள். ஹேராம் டைட்டில் பாடலும், ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தவை. இளையராஜா பின்னணி இசையில் வாசித்துத் தள்ளி இருப்பார்.

‘கலை’ என்ற தனி டிபார்ட்மெண்டை நான் கவனித்ததும் அந்தப் படத்தில்தான். சாபுசிரிலின் கலை நம்மை ஆங்கிலேயர் காலத்துக்கு கூட்டிப் போயிருக்கும். இப்படியே கதையைத் தவிர எதை எதையோ கவனிக்கவைத்தது அந்தப் படம். ஒருவழியாக படம் முடிந்தது. படம் நல்லாருக்கா இல்லையா என்கிற குழப்பத்திலேயே எழுந்து வெளியில் வந்தால் மணி 6.30க்கும் மேல் ஆகி இருந்தது.

வீட்டில் அதற்குள் தெருத்தெருவாக தேட ஆரம்பித்துவிட்டார்கள். பயந்துகொண்டே வீட்டுக்குத் திரும்பிப்போனால் வாசலில் வரவேற்க அப்பா கொடூரமான ‘இன்முகத்துடன்’ காத்திருக்கிறார். பொய்யே சொல்ல முடியாத அளவுக்குக் கையும் களவுமாக மாட்டி இருந்ததால் மேலும் டைம் வேஸ்ட் பண்ணாமல் உண்மையைச் சொல்லி சரமாரியாக திட்டு வாங்கிக்கொண்டேன். அவ்வளவு திட்டு வாங்கும் போதுகூட அந்தப் படத்தின் பிரம்மாண்டம் ஏற்படுத்திய பிரமிப்பு பல நாட்களுக்குப் போகவே இல்லை. பின்னர் பலநாட்கள் கழித்து பலமுறை அந்தப் படத்தைப் பொறுமையாக பார்த்து புரிந்துகொண்டேன்.

பிரம்மாண்டம் என்பது ரொம்ப அழகான வார்த்தை. கட்டிடம், திரைப்படம் என எதுவானாலும் நம்மை வாயைப் பிளக்க வைப்பது பிரம்மாண்டம்தான். நாம் ரோட்டுக்கு பெயிண்ட் அடிப்பதை, செல்ஃபோன்கள் எல்லாம் சேர்ந்து லூசுத்தனமால கொலை செய்வதையெல்லாம் பிரம்மாண்டம் எனச் சொல்லும் ஒரு கேவலமான காலத்தில் வாழ்கிறோம் என்றாலும் ஹேராம், பாகுபலி போன்ற நிஜ பிரம்மாண்டங்களையும் அவ்வப்போது பார்த்திருக்கிறோம். 

இவை கூட படங்கள். கதை, கலை, காட்சி என பார்வையினூடாக நாம் பிரம்மாண்டத்தை உணர்கிறோம். டைனாசரைப் கண்ணால் பார்த்தால்தான் பிரம்மாண்டம். ஆனால் காதுகளின் மூலமாக டைனாசரின் பிரம்மாண்டத்தை உணர வைக்க முடியுமா? செவியினூடாக அந்த grandeurயை, அந்த பிரம்மாண்டத்தை உணர்வதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம்.

ஹேராம் படத்தில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்…..’ என அந்தப் பாடலை கமல் ஆரம்பிக்கும்போதே பிரம்மாண்டம் ஒரு காட்டுத்தீயைப் போல நம்மைப் பற்றிக் கொள்ளும். பின்னர் அதில் வரும் வயலின்கள், ஏராளமான இசைக்கருவிகள், இளையராஜாவின் ஆர்கெஸ்டைரசேஷன் என அந்தப் பாடலின் பிரம்மாண்டத்திற்கு அளவே இல்லை. அதற்கு சரியான காட்சிப்படுத்துதல் இல்லை என்பதால் டிவியில் அடிக்கடி போடமாட்டார்கள் என்றாலும் அந்தப் பாடலை ஹெட்ஃபோனில் கேட்டால் அதுவே பல டைனாசர்கள் தரும் பிரமிப்பைத் தரும்.

படம் வந்தபோது மட்டுமல்ல. சமீபத்தில் இளையராஜா 75 விழாவில் கமல் அந்தப் பாடலைப் பாடினார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் சமகாலப் பாடல்களை, ஆர்கெஸ்ட்ரேஷன்களை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் வகையில்தான் இப்போதும் இருக்கிறது அந்தப் பாடல். முதல் வரிசையில் அமர்ந்து கமல் அந்தப் பாடலை ஆரம்பிக்கும்போது நிஜமாகவே மெய்சிலிர்த்துவிட்டது. ரஜினி அருகில் அமர்ந்து ‘மனுசன்தானா நீயெல்லாம்…’ என்கிற வகையில் கமலை பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருப்பார்.

இளையராஜா இப்போது களத்தில் பெரிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் சமகால இசையையும் சரி, எதிர்கால இசையையும் சரி, பலமாக மிஞ்சும் அளவிற்குச் சில சிறப்பான சம்பவங்களைச் செய்துவைத்திருக்கிறார். அதில் ஹேராம் ஒன்று.

-டான் அசோக்

A1TamilNews.com

From around the web