இம்மாத இறுதிக்குள் பொதுச் செயலாளர்? எடப்பாடியின் மாஸ்டர் பிளான்!

சென்னை: இந்த மாத இறுதிக்குள் அதிமுக பொதுக்குழு கூட இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இபிஎஸ் – ஒபிஎஸ் பனிப்போர் முற்றியிருக்கும் வேளையில், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரமிக்க பொதுக்குழுக் கூட்டம் நடக்க இருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக விதிகள் படி ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட வேண்டும். கடந்த ஆண்டு கஜா புயல் காரணங்களால் கூட்டம் நடத்த இயலவில்லை, கால அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் வாங்கியிருந்தார்கள். அதன் படி ஜுன்
 

சென்னை: இந்த மாத இறுதிக்குள் அதிமுக பொதுக்குழு கூட இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இபிஎஸ் – ஒபிஎஸ் பனிப்போர் முற்றியிருக்கும் வேளையில், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும்  அதிகாரமிக்க  பொதுக்குழுக் கூட்டம் நடக்க இருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக விதிகள் படி ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட வேண்டும். கடந்த ஆண்டு கஜா புயல் காரணங்களால் கூட்டம் நடத்த இயலவில்லை, கால அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் வாங்கியிருந்தார்கள். அதன் படி ஜுன் 30ம் தேதிக்குள் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற வேண்டும்.

இன்று சென்னையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களை முதல்வர் எடப்பாடி சந்திக்கிறார். தனிப்பட்ட முறையில் மாவட்ட அளவில் இந்த சந்திப்பு இருக்கும் எனத் தெரிகிறது. ஆட்சியை கவிழ்க்க திமுக எடுத்து வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டி ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடமும் எடப்பாடி உருக்கமாகப் பேசி, கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

ஓபிஎஸ்-க்காக ஒற்றைத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பிய மதுரை ராஜன் செல்லப்பாவும், கட்சியின் ஒற்றுமையே முக்கியம் என்று திருப்பரங்குன்றத்தில் பேசியுள்ளார். ஒற்றைத் தலைமை என்று ஓபிஎஸ் தரப்பு எழுப்பிய முழக்கத்தையே தனக்கு சாதகமாகத் திருப்பியுள்ளாராம் இபிஎஸ்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் முதல்வரும் , பொதுச்செயலாளரும் ஒருவராகவே இருந்ததால் தான் ஆட்சியையும் கட்சியையும் ஒரு சேர நிர்வகிக்க முடிந்தது. அந்த வகையில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளராகவும் பணியாற்றுவது தான் கட்சிக்கு வலிமை சேர்க்கும் என்ற எண்ணங்கள் பெருவாரியான தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் பொதுக்குழுக் கூட்டமும் கூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், எல்லாவற்றையும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இபிஎஸ் தரப்பு முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது.

ஓபிஎஸ்-ஐ சமாதானப் படுத்த அவருடைய மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவிக்கு ஓகே தரப்பட்டுள்ளதாம். ஒருங்கிணைந்த அதிமுகவாக, பாஜகவிடம் இரண்டு அமைச்சர் பதவி கேட்டுப் பெறுவது தான் திட்டமாம். அதிமுக பிளவுபட்டுப் போனால் இருவருக்கும் எந்த பயனும் இல்லை. மேலும், எதிர்பார்த்த அளவுக்கு கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதையும் உணர்ந்து கொண்ட ஓபிஎஸ், துணை முதல்வர் பதவியில் நீடிப்பு, மகனுக்கு மத்திய மந்திரி என்ற வகையில் சமரசத்திற்கு வந்து விட்டாராம்.,

வழிக்கு வராவிட்டால் ஓபிஎஸ்-ஸை கழட்டி விடவும் துணிந்து தான், அவருக்கு பரம வைரியான அமமுகவின் தங்கத் தமிழ்ச் செல்வனுக்கு தூது விடப்பட்டதாகவும் தெரிகிறது. 

அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்படுத்தி  கட்சியை வலுவிழக்கச் செய்ய பாஜக தரப்பிலிருந்து தான் ஓபிஎஸ்-க்கு அழுத்தம் தரப்பட்டதாகவும், அரசல் புரசல் தகவல்கள் உலவுகிறது.  ஆட்சியை மு.க.ஸ்டாலின் கவிழ்த்து விட்டால், அதே நேரத்தில் அதிமுக பிளவு பட்டுப் போனால் அது உச்ச நட்சத்திரத்திற்கு சுக்கிர திசையாக அமையும் என்ற அரசியல் கணக்காம் அது.

திமுகவின் கவிழ்ப்பு முயற்சியைக் காட்டியே ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வளைத்து விட்ட இபிஎஸ், பொதுச் செயலாளராகவும் ஆக முடிவெடுத்தாராம். இதன் மூலம் பாஜகவின் நெருக்கடியை சமாளித்து, இரட்டை இலையை தக்க வைத்துக் கொள்ளலாம். 2021 தேர்தலில் பாஜகவை மட்டும் கழட்டி விட்டு மற்ற கூட்டணி கட்சிகள் உதவியுடன் கணிசமான தொகுதிகளைப் பெறலாம் என்ற நீண்டகாலத் திட்டமும் பின்னணியில் இருக்கிறதாம்.

வைத்தியலிங்கம், தம்பிதுரை, ஜெயகுமார் போன்ற மூத்த தலைவர்கள், இது வரை பாஜகவிடம் பட்டது போதும். ஆட்சி போனாலும், கட்சியை முழுமையாக வைத்துக் கொண்டாலே, அடுத்த தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்களாம். 

ரஜினியும் அரசியலுக்கு வரும் போது, கமல், நாம் தமிழர் என்று நாலாபுறமும் வாக்குகள் பிரியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசிகளின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டாலே வெற்றி சாத்தியம் என்று கணக்குப் போடுகிறார்களாம்.

ஒரு வேளை இந்த் முயற்சிகள் இபிஎஸ்-க்கு சாதகமாக அமையாமல் போனால், இன்னொரு மாஸ்டர் ப்ளானும் கைவசம் இருக்கிறதாம்!

From around the web