கொரோனாவுடன் போராடிய வெற்றித் தமிழர்! துபாயிலிருந்து நேரடி ரிப்போர்ட்!! Exclusive

உலகெங்கும் கொரொனா தொற்று மனித குலத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் துபாய் நகரில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தியேனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் போராடி அதிலிருந்து மீண்டுள்ளார். அனைவருக்கும் நம்பிக்கை தரும் அந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். துபாயில் 14 வருடங்களுக்கு மேலாக சீனியர் ப்ராஜக்ட் மேனஜராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் அங்கே குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். ஏப்ரல் 9ம் தேதி வியாழக்கிழமை சாதாரண நாளாகத் தான் விடிந்தது. காலை
 

கொரோனாவுடன் போராடிய வெற்றித் தமிழர்! துபாயிலிருந்து நேரடி ரிப்போர்ட்!! Exclusiveலகெங்கும் கொரொனா தொற்று மனித குலத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் துபாய் நகரில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தியேனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் போராடி அதிலிருந்து மீண்டுள்ளார். அனைவருக்கும் நம்பிக்கை தரும் அந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

துபாயில் 14 வருடங்களுக்கு மேலாக சீனியர் ப்ராஜக்ட் மேனஜராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் அங்கே குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். ஏப்ரல் 9ம் தேதி வியாழக்கிழமை சாதாரண நாளாகத் தான் விடிந்தது. காலை ஆறரை மணி அளவில் துபாயிலிருந்து புறப்பட்டு அபுதாபியில் உள்ள ப்ராஜக்ட் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

தினசரி தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைவருக்கும் சோதனையிடும் போது இருவருக்கு காய்ச்சல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. எச்சரிக்கையாக இருந்த போதிலும், இது சற்று லேசான கலக்கத்தை கார்த்திகேயனுக்கும் கொடுத்துள்ளது. காலை உணவை முடித்துக் கொண்டு இருக்கைக்கு திரும்பியவருக்கு 11:30 மணி அளவில் கடுமையான உடல்வலி ஏற்பட்டுள்ளது. சோதித்து பார்த்ததில் கொஞ்சம் காய்ச்சல் இருப்பதும் தெரியவந்ததுள்ளது.

உடனடியாக வீடு திரும்பியவர், கொரோனாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்ததுள்ளது. வீட்டின் அடித்தளத்திற்கு சென்று தனிமைப் படுத்திக் கொண்டார். பாரசிட்டமால் மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டார். அடுத்த நாள் மருத்துவரைப் பார்த்ததில், கொரோனா அறிகுறி இல்லை, அதற்கான சோதனை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டனர்.

ஆனாலும் சந்தேகம் தீராத கார்த்திகேயேன், துபாய் முனிசிபல் மருத்துவத்துறைக்கு அழைத்து, அருகில் உள்ள மையத்திற்கு சென்று கொரோனா சோதனை செய்து கொண்டார். உடல் வலி, லேசான காய்ச்சல், வயிற்று வலி இருந்துள்ளது. பாரசிட்டமால் 500 எம்ஜி, விட்டமின் சி 1000 எம்ஜி மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டது. 6 மணி நேரத்திற்கு ஒரு மாத்திரை எடுத்துக் கொண்டார்.

சோதனை முடிவு வராவிட்டாலும், உடன் வேலை பார்ப்பவருக்கு இருப்பது உறுதியாகி விட்டதால் தனக்கு கொரோனா வந்திருப்பதாக நினைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். குடும்பத்தில் மற்றவர்களுக்கு பரவி விடக் கூடாது என்பதற்காக வீட்டின் அடித்தளத்தில் இருந்து கொண்டவர், கீழே இறங்கும் படியில் இரண்டு பெரிய மின்விசிறிகளை வைத்து கீழிருந்து மேல்தளத்திற்கு கொரொனா தொற்று காற்று செல்லாமல் தடுத்து, பாத்ரூமிலிருக்கு எக்சாஸ்ட் ஃபேன் மூலம் காற்றுச் சுழற்சியை ஏற்படுத்தியுள்ளார்.

காய்ச்சல் வருவதும், மாத்திரை சாப்பிட்டதும் குறைவதுமாக இருந்துள்ளது. காய்ச்சல் வரும் போது நெருப்பில் சுடுவதைப் போல் உக்கிரமாக இருந்ததாம். மாத்திரைகளுடன் அவருடைய மனைவி கொடுத்த சீரகத் தண்ணீரை அரை மணி நேரத்திற்கு ஒரு தடவையாக, நாளொன்றுக்கு 6 முதல் 7 லிட்டர் குடித்துள்ளார். சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீரகப் பிரச்சனை வராமல் தடுக்கவும் இது உதவும் என்று அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், இஞ்சி, மஞ்சள், மிளகு, சீரகம் , கற்பூரவல்லி மற்றும் துளசி கலந்த கசாயம் செய்து கணவருக்கு தினமும் மூன்று வேளை கொடுத்துள்ளார் மனைவி லல்லி. தேன், இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து இரண்டு மணி நேரத்திற்கு இரண்டு ஸ்பூன் கொடுத்துள்ளார்,

ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்து அறிக்கை வந்துள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடி உதவிக்கு அழையுங்கள், இல்லையென்றால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு பாரசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று துபாய் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இருந்த காய்ச்சல் ஞாயிற்றுக் கிழமை இல்லாமல் போனது. இயல்பு நிலைக்கு வந்து விட்டதாக நினைத்தவருக்கு, திங்கட்கிழமை மீண்டும் காய்ச்சல் வந்து விட்டது. அன்று இரவு தான் பெரும் அச்சம் ஏற்படும் நாளாக அமைந்துள்ளது. பேய்படத்தில் வருவது போல் படுக்கையிலிருந்து இரண்டு இன்ச் உயரே பறப்பது போல் உடம்பு நடுங்கியிருக்கிறது.

பக்கத்தில் யாரும் இல்லாமல் தனியாக இருந்ததால் அச்சம் வேறு குடிபுகுந்து கொண்டது. இஷ்ட தெய்வமான அய்யப்பனிடம் வேண்டுதல் வைத்துள்ளார். காய்ச்சல், தலைவலி, உடல் முழுவது வலி என இரண்டு நாட்களுக்கு கடுமையான சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார். அய்யப்பனின் அருளாசியுடனும், மன வலிமையுடன் தான் இதை கடந்து வர முடிந்தது என்று கூறுகிறார்.

7 வது நாள் காய்ச்சல் குறைந்துள்ளது. மூன்றாவது கட்டமாக நிமோனியாவுக்கு செல்லக்கூடும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்ததால் அதை எதிர்கொள்ள தயாராகி உள்ளார். இது தான் மிகவும் அபாயமான கட்டம். நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுவாசம் 94 சதவீததிற்கு குறைந்தால் வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் செலுத்தப்பட வேண்டும்.

தெர்மா மீட்டர், மெடிக்கல் ஆக்ஸிஜன் சிலிண்டர், உடலில் உள்ள ஆக்சிஜனை சோதித்துப் பார்க்கும் ஆக்ஸிமீட்டர் என அவசர உதவிக்கு தேவைப்படும் அனைத்தையும் வாங்கிவிட்டார் கார்த்திகேயனின் மகன் சீனு . ஆக்ஸிமீட்டரில் அடிக்கடி சோதித்துப் பார்த்துக் கொண்டார் கார்த்திகேயன்.

இந்த 3வது கட்டத்தில், படுக்கும் போது தொண்டைக்கும் நுரையீரலுக்கும் இடையே அழுத்தம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் போல் உணர்ந்துள்ளார். என்னவென்று விவரிக்க இயலாத மூச்சடைப்பு போன்ற உணர்வு என்று சொல்கிறார். ஆனால் ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்திற்கு கீழே செல்லவில்லை என்பதால் ஆக்ஸிஜன் சிலிண்டரை உபயோகிக்கத் தேவை ஏற்படவில்லை. காய்ச்சலும் கட்டுக்குள் வந்துள்ளது.

மெல்ல மெல்ல குணமடையத் தொடங்கியுள்ளார். பழங்கள், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை உணவு என சாப்பிட்டுள்ளார். முருங்கைக்கு நுரையீரலை பாதுகாக்கும் தன்மை இருப்பதாக சொன்னதால், இரண்டு நாளுக்கு ஒரு தடவை முருங்கைகாய், இலை என உணவில் சேர்த்துள்ளார் மனைவி லல்லி.

எல்லாவற்றிற்கும் மேலாக தனியாக இருந்து இந்த நோயுடன் போராடுவது தான் மிகவும் சிரமமானது. மிகுந்த மன வலிமையும் குடும்பத்தாரின் உதவியும் கட்டாயம் தேவை. கொரோனா தொடர்பான எந்த ஒரு செய்தியையும் பார்ப்பதை தவிர்த்ததாகவும் கூறினார்.

குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம். 3 நாட்கள் காய்ச்சல், 1 நாள் இடைவெளி 3 நாட்கள் உடல்வலி, மீண்டும் 1 நாள் இடைவெளி, 3 நாட்கள் மூச்சடைப்பு என அறிகுறி தென்பட்ட 12 நாட்களுக்குள் முழுமையாக குணமடைந்ததாக தெரிவித்தார் கார்த்திகேயன். மருத்துவர்கள் ஆலோசனையின் படி 15ம் நாள், ஏப்ரல் 25ம் தேதி பணிக்கும் திரும்பிவிட்டார்.

கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான, சமூக இடைவெளி, முகக்கவசம், கையுறை, கைகளை அடிக்கடி கழுவுதல் என அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடியுங்கள். ஒரு வேளை தொற்று ஏற்பட்டுவிட்டால் பயப்பட வேண்டாம். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் கொரோனாவை வெல்லலாம். என்னால் முடியும் என்றால் உங்கள் அனைவராலும் முடியும் என்று முத்தாய்ப்பாக முடித்தார் கார்த்திகேயன்.

A1TamilNews.com Exclusive

From around the web