தேவ் விமர்சனம்

நடிகர்கள் – கார்த்தி, ரகுல்ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஒளிப்பதிவு – வேல்ராஜ் இசை – ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் இயக்கம் – ரஜத் ரவிசங்கர் பணக்கார இளைஞர் கார்த்தி, குடும்பமே கொண்டாடும் செல்லப் பையன். எப்போதும் சாகசங்கள் நிகழ்த்துவது, அல்லது சாகசங்கள் செய்வது இதுதான் வாழ்க்கை என நினைக்கும் உற்சாக இளைஞன். ரகுல் பிரீத் சிங் ஒரு இளம் தொழிலதிபர். இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகிறார்கள். கார்த்தியின் சில
 

தேவ் விமர்சனம்

டிகர்கள் – கார்த்தி, ரகுல்ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு – வேல்ராஜ்

இசை – ஹாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ்

இயக்கம் – ரஜத் ரவிசங்கர்

பணக்கார இளைஞர் கார்த்தி, குடும்பமே கொண்டாடும் செல்லப் பையன். எப்போதும் சாகசங்கள் நிகழ்த்துவது, அல்லது சாகசங்கள் செய்வது இதுதான் வாழ்க்கை என நினைக்கும் உற்சாக இளைஞன். ரகுல் பிரீத் சிங் ஒரு இளம் தொழிலதிபர். இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகிறார்கள். கார்த்தியின் சில பல சாகசங்களில் கவரப்பட்டு, ஒரு நாள் மும்பையிலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே அவருடன் பயணம் செய்கிறார். பயணத்தின் முடிவில் இருவருக்கும் அப்படியொரு காதல் பற்றிக்கொள்கிறது.

அந்தப்பக்கம் ரகுல் பிரீத் சிங்ன் தாய்க்கும் இந்த காதலில் சம்மதம், இந்தப்பக்கம் கார்த்தியின் தந்தை பிரகாஷ்ராஜ்க்கும் முழு சம்மதம். இப்படியெல்லாம் பக்காவாக செட்டான நிலையில் இருவருக்குள்ளும் ஒரு திடீர் பிரிவு. ஏன் என்பதை திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தின் சுவாரஸ்யம் என்றால் அது கார்த்தி மட்டும் தான். வாழ்க்கையை அவர் ரசிக்கும் விதம், சாலைப் பயணங்களில் அவரது ரசனை, ரகுல் பிரீத் சிங்கை அவர் உருகி உருகி காதலிப்பது, சண்டை காட்சிகளில் காட்டும் மின்னல் வேகம் என அழகாய், அளவாய் நடித்திருக்கிறார். ஆனால் அந்த நடிப்பு ஒரு சரியான கதைக்கு பயன் பட்டிருக்கிறதா என்பது தான் கேள்வி.

மும்பையிலிருந்து சென்னைக்கு பைக்கில் காதலியுடன் ஒரு ஜாலி ட்ரிப் போகும் ஹீரோ என்று சொல்லி கார்த்தியை சம்மதிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. கதையில் அடுத்தடுத்து என்ன காட்சிகள், வசனங்கள் வரப்போகின்றன என்பதை பார்வையாளர்கள் எளிதாக சொல்லிவிடும் அளவிற்கு தட்டையான திரைக்கதை, படத்திற்கு பெரிய மைனஸ். பிரிந்து போய்விட்ட காதலியை தேடிப்போய் சமாதானம் படுத்தி ஒன்று சேருவார் என்று எதிர்பார்த்தால், பொசுக்கென்று எவரெஸ்ட் சிகரம் எற போய் விடுகிறார் கார்த்தி. அதுவும் எப்படி… சாதாரண ஷூக்கள், இரண்டு ஜர்க்கின்கள், ஆக்சிஜன் மாஸ்க் கூட இல்லாமல்.

நாயகி ரகுல் பிரீத் சிங் முகத்தில் அவ்வளவு முதிர்ச்சி. சில காட்சிகளில் கார்த்தியை விட மூத்தவராய் தெரிகிறார்.

யுட்யூபில் காமெடி செய்வதற்கும், சினிமாவில் காமெடி செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை ஆர் ஜே விக்னேஷ் இந்தப் படத்தில் புரிந்துக் கொண்டிப்பார். அவரும் சரி அவரின் காமெடியும் சரி ஒரு இடத்தில் கூட சிரிப்பு வரவைக்கவில்லை.

ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிப்பு ராட்சசர்களை துணுக்கு வேடங்களில் தோன்ற வைத்திருக்கிறார்கள். படத்தில் கார்த்திக்கு அடுத்து கவரும் அம்சம் வேல்ராஜின் ஒளிப்பதிவு.

திரையில் திடீரென்று புரியாத மொழியில் ஒரு பாடல் ஆரம்பிக்கும் போதே ‘ ஓ.. ஹாரிஸ் ஜெயராஜ் இசையா?’ என சத்தமாகவே கேட்கிறார்கள் பார்வையாளர்கள். வேறு பாடல்களையே அவர் கேட்பதில்லை போலிருக்கறது. அதனால்தான், தான் போட்ட டியூன்களையே மீண்டும் அவர் பயன்படுத்தி வருகிறார். ஆனால் ஒரு விஷத்திற்காக பாராட்ட வேண்டும், அந்த காதல்பிரிவு பாடலில் எஸ் பி பாலசுப்ரமணியத்தை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.

தித்திக்க தித்திக்க காதலிக்கலாம், திகட்ட திகட்ட கூட காதலிக்கலாம். ஆனால் எப்படா முடியும் என்று கேட்க்கும் அளவிற்கு மட்டும் காதலிக்க கூடாது. இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இதை மனதில் வைத்து இந்த திரைக்கதையை உருவாக்கியிருந்தால் இந்த காதலர் தினத்தில் நல்ல காதல் படம் பார்த்த திருப்தியை ‘தேவ்’ தந்திருக்கும்.

Rating : 2.25/5.0

 

From around the web