கால்வாயில் கழிவு நீரை விட்ட டிரைவர் குளக்கரையில் பனை விதை நடவு செய்தார்..!

 
Chennai Chennai

குடியிருப்பு பகுதிகளில் சேகரித்த கழிவுநீரை லாரியில் கொண்டு வந்து, கிருஷ்ணா கால்வாயில் விட்ட டிரைவர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் பனை விதைகளை நடவு செய்து தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறைவு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. கழிவுநீர் லாரி டிரைவரான இவர், கடந்த 2018-ம் ஆண்டு தண்டலம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை லாரியில் நிரப்பி எடுத்துச் சென்று, ஸ்ரீபெரும்புதூர் அருகே செட்டிப்பேடு பகுதி கிருஷ்ணா கால்வாயில் கொட்டியுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கழிவுநீர் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் அன்புவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி, கழிவுநீரை கிருஷ்ணா கால்வாயில் விட்ட டிரைவர் அன்புவுக்கு ரூ.1,200 அபராதம் விதித்தார்.

Chennai

அத்துடன், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் ஏதாவது ஒரு ஏரி அல்லது குளக்கரையில் 10 பனை விதைகள் நட வேண்டும். அதை, அலுவலர் உறுதி செய்து அறிக்கை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம் பகுதியில் உள்ள குளக்கரையில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் 10 பனை விதைகளை நடவு செய்து, தனக்கு கொடுத்த தண்டனையை நிறைவேற்றினார் டிரைவர் அன்பு.

From around the web