சென்னையில் தொடரும் பயங்கரம்!! பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்!!
இந்த நிலையில் நேற்று மாலை பேருந்தில் பயணம் செய்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பேருந்தில் ஏறி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர் வரை செல்லக்கூடிய மாநகர பேருந்தானது நேற்று மங்களபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். பிரெசிடென்சி கல்லூரி மாணவர்களான மேகநாதன், அபிஷேக், அருண் ஆகியோரிடம் சென்று எந்த கல்லூரி என கேட்டுள்ளனர்.பின்னர் 3 மாணவர்களை 20 மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கிவிட்டு பின்னர் பேருந்தின் பின்பக்கம் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுனரான ஓட்டேரியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவர்களை தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மகேஷ் குமார்(19), மாரிமுத்து(18), சூர்யா(18), கிஷோர்(19), அன்பு( 19) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் கோஷ்டி மோதல் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.