அமெரிக்காவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி, 14 பேர் படுகாயம்!!
நியூயார்க் மாநிலம் ராச்சஸ்டர் நகரில் நள்ளிரவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
ராச்சஸ்டர் நகரின் பென்சில்வேனியா அவென்யூவில், ஒரு வீட்டின் பின்பகுதியில் உள்ள திறந்தவெளியில் இரவு விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க கிழக்கு நேரம் நள்ளிரவு 12:25 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசாரும் அவசர உதவி பணியாளர்களும் விரைந்து சென்றுள்ளனர்.
பலியான இருவரில் ஒருவர் 18 முதல் 22 வயது மதிக்கத்தக்கப் பெண். மற்றொருவர் அதே வயதை ஒத்த ஆண் என்று தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் பெயர்களை இன்னும் போலீசார் வெளியிட வில்லை. காயமடைந்த 14 பேர் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போது சுமார் 100 பேர் குறுக்கு மறுக்காக ஓடிக்கொண்டுள்ளனர் அதில் சிக்கியும் சிலர் காயமடைந்துள்ளனர்.. அங்கிருந்தவர்களிடம் தொலைக்காட்சி செய்தியாளர் கேட்ட போது, வியட்நாம் சண்டையைப் போல் துப்பாக்கிச் சத்தம் காதைப் பிளந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயர சம்பவம் நிறைய குடும்பங்களை பாதித்துள்ளது. ராச்சஸ்டர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள், தயவு செய்து அனைவரும் அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள் என்று நகர மேயர் லவ்லி வாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. ராச்சஸ்டர் நகரில் போலீஸ் காவலில் 41 வயது டேனியல் ப்ரூட் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவைத் தொடர்ந்து, நகரில் இரவு நேர ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது.