அமெரிக்காவில் பட்டப்பகலில் நூதனமான திருட்டு! தபால் பெட்டியில் கைவரிசை!!

கொரோனா பேரிடரால் அமெரிக்காவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அதிகரித்து இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், வீட்டின் முன்னால் உள்ள தபால் பெட்டியில் இருக்கும் தபால்கள் மற்றும் பார்சல்களை திருடு போவது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் அமைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டியில், அந்த வீட்டிற்கு வரும் தபால்களையும் பார்சல்களையும், தபால்காரர் வைத்துச் செல்வது வழக்கம்.
தபால்காரர் வரும் நேரம் சரியாகத் தெரியாததால், மாலையில் சென்று பார்சல் மற்றும் தபால்களை வீட்டுக்காரர்கள் எடுத்து வருவார்கள். அதற்கு முன்னதாக அந்தத் தெருவுக்கு வரும் திருடர்கள், வீட்டின் முன்னால் உள்ள தபால்பெட்டியில் இருக்கும் பார்சல் மற்றும் தபால்களை அபேஸ் செய்து விடுகிறார்கள்.
டெக்சாஸில் டல்லாஸ் மாநகரப் பகுதியில் உள்ள இர்விங் நகர குடியிருப்பு பகுதியில் இத்தகைய திருடன் ஒருவரை வீடியோவில் படம்பிடித்து போலீசுக்கு அனுப்பியுள்ளனர். அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ள காவல்துறையினர், இத்தகைய சம்பவங்களை காண நேரிட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துமாறு கூறியுள்ளனர்.
Be on the look out! If you see suspicious activity please call our non emergency number immediately with the location and a good description of the person and/or vehicle. pic.twitter.com/SnF9j91toA
— Irving Police Dept. (@IrvingPD) September 9, 2020
இத்தகைய திருடர்களிடம் ஒரு போதும் நேருக்கு நேராக சண்டையிட முயற்சிக்கவே கூடாது. அவர்கள் கையில் துப்பாக்கி இருக்கலாம், பொருளாதார இழப்பைத் தவிர்ப்பதற்காக எடுக்கும் முயற்சியில் உயிரையே இழக்க நேரிடலாம். ஒருவேளை வழிப்பறி அல்லது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து திருட வரும் கும்பல்களை சந்திக்க நேரிட்டால், எச்சரிக்கையாக சூழ்நிலையை கையாண்டு, உயிர் பிழைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தபால்காரர் வரும் நேரம் அறிந்து உடனடியாக தபால் பெட்டியிலிருந்து பார்சல் மற்றும் கடிதங்களை எடுத்துச் சென்று விடுவது நல்லது.