இதுபோன்ற விளம்பரங்களை நம்பாதீங்க: 30 பெண்களிடம் ரூ.2.5 லட்சம் மோசடி..!

 
Crime

தூத்துக்குடியில், ‘அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை’ என ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் வெளியிட்டு, 30 பெண்களிடம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தன்னுடன் கல்லூரியில் படித்த அத்திமரப்பட்டியைச் சேர்ந்த தோழியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ‘கிங் ஸ்டார் பிரைவேட்’ என்ற நிறுவனம் மூலம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார்.

இதையடுத்து சுவாதி, கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியில் உள்ள ‘கிங் ஸ்டார் பிரைவேட்’ என்ற நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு சென்றுள்ளார். அங்கு, முதலில் 8,000 ரூபாய் கட்டினால் அரசு அங்கீகாரம் பெற்ற வேலைக்கான ஆர்டர் கிடைக்கும். வாரம் தோறும் 2,500 ரூபாய் மற்றும் போனஸ் தொகையும் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

அதை நம்பிய சுவாதி, மறுநாள் சென்று 8,000 ரூபாய் செலுத்தியுள்ளார். இதையடுத்து அந்த நிறுவனத்தினர், ‘ஜாயினிங் லீகல் அக்ரீமென்ட்’ என்ற பெயரில், 20 ரூபாய் பத்திரத்தில் சுவாதியின் தனிப்பட்ட விவரங்கள், கையெழுத்து மற்றும் புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, அவருடைய செல்போனுக்கு ஒரு ‘எம்ப்ளாயி ஐடி’ அனுப்பி, பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Crime

பணியில் சேர்த்த சுவாதியிடம், “வேலை தேடி வரும் நபர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். அதன்படி, வேலைக்கு வரும் நபர்களுக்கு சுவாதி பயிற்சி அளித்துள்ளார். 2 வாரம் பணிபுரிந்து விட்டு சுவாதி சம்பளம் கேட்ட போது, “நீ எவ்வளவு பேரை நிறுவனத்தில் சேர்த்துவிடுகிறாயோ, அதற்கு ஏற்றார்போல் கமிஷன் கிடைக்கும்” என்று கூறியுள்ளனர்.

அத்துடன், 10 பேருக்கு மேல் சேர்த்துவிட்டால் உதவி மேலாளராக ஆகி விடலாம் என்றும், அவருக்கு கீழ் ஒரு உதவி மேலாளர் இருந்தால், மேலாளராக ஆகி விடலாம் என்றும், 3 மாதம் கழித்து மாதம் 25,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றும் சுவாதியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பிய சுவாதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘கிங் ஸ்டார் பிரைவேட்’ நிறுவனம் சார்பில் ‘அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை’ என்று விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தைப் பார்த்து வந்த 9 பேர், 8,000 ரூபாய் செலுத்தி வேலைக்கு சேர்ந்துள்ளனர். இதுபோல், மொத்தம் 30 பெண்கள் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை.

Crime

இதையடுத்து, சுவாதி உட்பட 30 பேரும் சேர்ந்து புது கிராமத்தில் உள்ள ‘கிங் ஸ்டார் பிரைவேட்’ நிறுவனத்திற்குச் சென்று அங்கிருந்த ஊழியர்கள் மாரிமுத்து, மணிகண்டன், கிறிஸ்டியன் சுதாகர், சகுந்தலா, ஜெபசீலா எஸ்தர், பிரகாஷ் ஆகியோரிடம் தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு, “உங்களைப் போல இன்னும் நிறைய பேரை சேர்த்து விட்டால் தான் சம்பளம் தரமுடியும். இல்லையென்றால், எங்களிடம் உள்ள உங்கள் தனிப்பட்ட விவரங்களையும், புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் தவறாக பதிவிட்டு அசிங்கப்படுத்தி விடுவோம்” என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து சுவாதி அளித்த புகாரின் பேரில் துரித நடவடிக்கை மேற்கொண்ட தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா ராணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, ‘கிங் ஸ்டார் பிரைவேட்’ என்ற போலி நிறுவனத்தைச் சேர்ந்த விருதுநகர் மாவட்டம் வி.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 23), மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24), திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டியன் சுதாகர் (வயது 23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம், இதுபோல் எங்கெல்லாம், எத்தனை பேரிடம் பணம் பெற்று ஏமாற்றி உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SP-Jayakumar

இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், “ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வலம் வரும் ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். அத்துடன், இது போன்ற விளம்பரங்கள் போலி என்று தெரியாமல் உங்கள் வலைதள பக்கங்களில் பதிவிட்டு மற்றவர்களை ஏமாற்றமடைய செய்ய வேண்டாம்” என்றார்.

From around the web