மானத்துக்கு பயந்து பணம் கொடுக்காதீங்க; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!

 
Black-mail

சமூக வலைதளங்களில் ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டினால், மானத்திற்கு பயந்து பணத்தை வழங்க வேண்டாம்; உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீஸார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக, சமூக வலைதளங்களின் மூலம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக, பெண்கள் பெயரில் ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கி, ஆண்களை குறிவைத்து பணம் பறிக்கும் மோசடி அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் குவிந்து வருகிறது. அந்தப் புகாரில், “பெண்களின் பெயரில் ஃபேஸ்புக் ஐடி உருவாக்கி, ஃபேஸ்புக்கில் உள்ள ஆண்களை குறிவைத்து நட்பு அழைப்பு கொடுக்கின்றனர். அதில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை பார்க்கும் ஆண்கள் அவர்களுடைய நட்பு அழைப்பை ஏற்றுக் கொண்டு பின்னர் பழகி அந்த நபரின் செல்போன் எண்ணை பெற்றுக் கொள்கின்றனர்.

Police

இதனையடுத்து, வாட்ஸ் அப் மூலமாக பெண் ஒருவர் ஆபாச வீடியோ கால் செய்து அந்த ஆணையும் ஆபாசமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார். அந்தப் பெண் கூறும் ஆசை வார்த்தையை நம்பி அந்த ஆண் ஆபாசமாக வீடியோ காலில் இருக்கும் போது, அதை பதிவு செய்துகொள்கின்றனர்.

அதன்பின்னர், பதிவு செய்த அந்த வீடியோவை வைத்து அந்தக் கும்பல் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தர மறுத்தால், அந்த ஆணின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அந்த வீடியோவை அனுப்பி விடுவோம் என மிரட்டுகின்றனர்” என பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், இந்த மோசடியில் சிக்கி, மருத்துவ மாணவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் 5 லட்சம் ரூபாய் வரை இழந்தது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடமாநில கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த மோசடியில் தொடர்ச்சியாக பலர் சிக்கி புகார் அளித்து வரும் நிலையில், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், “சமூக வலைதளங்களில் பழக்கமாகி செல்போன் எண்களை பெற்று வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோ கால் செய்து, அதை பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும். மானத்திற்கு பயந்து பணத்தை வழங்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

From around the web