தரக்குறைவாக பேசிய திமுக பிரமுகர்; மனமுடைந்து விஷம் குடித்த பெண் பலி..!

 
Sweeper-Nathiya

குத்தாலம் பேரூராட்சியில், திமுக பிரமுகர் ஆபாசமாக திட்டியதால் மனம் உடைந்து விஷம் குடித்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி பலியானார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதாரப் பரப்புரையாளராக பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள், வீடுகள்தோறும் சென்று சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து பேரூராட்சிக்கு தகவல் தெரிவிப்பது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்துச் சொல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களின் ஒப்பந்த காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த நான்கு பேரையும் வேலையை விட்டு நீக்கி விட்டு, திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அந்தப் பணி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

Sweeper-Nathiya

இதையடுத்து, குத்தாலம் நகர திமுக செயலாளர் சம்சு என்பவரை சந்தித்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி நதியா கேட்டுள்ளார். அப்போது சம்சு, நதியாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நதியா, வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நதியாவை, உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உயிருக்குப் போராடிய அவரை, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், “நதியாவின் இறப்புக்கு திமுகவினரே காரணம். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, நதியாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web