கல்லூரி மாணவி குத்திக் கொலை! கட்டிடத் தொழிலாளி கைது!!

 
கல்லூரி மாணவி குத்திக் கொலை! கட்டிடத் தொழிலாளி கைது!!

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், பி.ஜி.அவென்யூ, 4-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகள் மீனா(வயது 20). இவர், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வீட்டின் மாடியில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. 

கட்டுமான வேலைக்கு ஆட்கள் வந்துள்ளார்களா? என்று குறித்து கேட்க தனலட்சுமி தனது மகள் மீனாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. மீண்டும் சிறிதுநேரம் கழித்து தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தனலட்சுமி, பக்கத்து வீட்டு பெண்ணிடம் கூறி வீட்டில் சென்று பார்க்கும்படி கூறினார். அந்த பெண் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் இரும்பு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மரக்கதவு திறந்து கிடந்தது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மீனா, கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போரூர் உதவி கமிஷனர் சம்பத், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையிலான போலீசார் கொலையான கல்லூரி மாணவி மீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மீனாவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் மீனா அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் செல்போனையும் காணவில்லை. இதனால் நகை, செல்போனுக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.  மீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவாக இருந்த கட்டிடத்தொழிலாளி சண்முகம்(42) என்பவரை பூந்தமல்லி தனிப்படை போலீசார் விழுப்புரத்தில் கைது செய்தனர். மீனாவை கொலை செய்து விட்டு நண்பரின் மோட்டார் சைக்கிளிலேயே விழுப்புரம் தப்பியது தெரிய வந்துள்ளது. கைதான அவரை போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

A1TamilNews
 

From around the web