ஓராண்டாய் உளறி வைத்தேன் உன்னை நான் பார்க்க வரேன்னு – காக்கை விடும் தூது!

நான்கு சுவர்களுக்குள் நாள் கணக்காய் ! முதல் முறையாய் மூச்சுக் காற்றின் ஒலி முழுதாய்க் கேட்கிறது என் செவி, மூடிக் கிடக்கும் வீடுகளுக்கு வெளியே உள்ள வெறுமையில் ! கத்தும் குயிலினிசை காதினை வருடுகிறது! மோதும் தென்றல் மேனியை முழுதாய்த் தழுவியது! வீட்டின் கொல்லையிலே வீற்றிருக்கும் நெடு மரங்கள் வெறித்து நான் பார்த்து நின்றேன் வெளியுலகை! வீற்றிருக்கும் பேரழகை இரு கண்ணால் விழுங்கிக் கொண்டேன் ! படர்ந்து நிற்கும் பச்சைப் புல்வெளியில் கலந்துக் கிடக்கும் களைச்செடிகள், களை
 

ஓராண்டாய் உளறி வைத்தேன்  உன்னை நான் பார்க்க வரேன்னு – காக்கை விடும் தூது!நான்கு சுவர்களுக்குள்
நாள் கணக்காய் !

முதல் முறையாய்
மூச்சுக் காற்றின் ஒலி
முழுதாய்க் கேட்கிறது
என் செவி,
மூடிக் கிடக்கும் வீடுகளுக்கு
வெளியே உள்ள வெறுமையில் !

கத்தும் குயிலினிசை
காதினை வருடுகிறது!

மோதும் தென்றல் மேனியை
முழுதாய்த் தழுவியது!

வீட்டின் கொல்லையிலே
வீற்றிருக்கும் நெடு மரங்கள்
வெறித்து நான் பார்த்து நின்றேன்
வெளியுலகை!
வீற்றிருக்கும் பேரழகை இரு கண்ணால்
விழுங்கிக் கொண்டேன் !

படர்ந்து நிற்கும்
பச்சைப் புல்வெளியில்
கலந்துக் கிடக்கும்
களைச்செடிகள்,
களை பறிக்க
நான் தொடங்க,
மண்ணின் மகாராணி(மண் புழு)
முற்றம் வந்து என்
முகம் பார்த்துச் சென்றாள்!

சுடும் சூரியனுக்கு
முதுகுக் காட்டினேன்,
முகம் மூடிய அண்டைவீட்டு
முதியவருக்குக் கை காட்டினேன்!

அப்பொழுதில்,
ஓங்கிய மரத்தின்
உச்சிக் கிளைதனிலே
ஒய்யாரமாய் ஒரு காகம்
ஓயாமல் அது கரையும்
ஒலியினிலே ஒரு சோகம்!

ஊரு விட்டு ஊரு வந்து
உறவைத் தேடும் ஓருயிர்!
உரக்க நானும் சொல்லி வைத்தேன்
உன்னைப் போலத்தான் நானும் என!

எனக்காக காத்திருக்கா
விழிபூத்து பார்த்திருக்கா என் தாயி!
ஓராண்டாய் உளறி வைத்தேன்
உன்னை நான் பார்க்க வரேன்னு
இப்போ,
சொல்லாம கொள்ளாம
கொரோனவும் வந்துருச்சு
கண்டம்,கடல் அது தாண்டி
காத்தா வந்துருக்கு,
நான் காண வேண்டிய உறவெல்லாம்
கண் பூத்து காத்திருக்கு !

கரையும் காக்கையாரே
கண்டம் தாண்டி போகையிலே -என் வீட்டு
கொல்லையிலே என் அம்மா
கொள்ள துணி துவைச்சிருப்பா
கொஞ்சம் நீயும் தூது போனா
இது காகம் விடு தூதும் ஆகும்!

உன் பிள்ளை உனைக் காண
உருக்கமா காத்திருக்கு-இப்போ
ஊருக்குள்ள புது நோயாம்
வீட்டை விட்டு வெளிய வந்தா
உடனடியா பிடிச்சுக்குதாம்!

ஒரு ஆண்டு காத்திரு உனக்கது
ஒரு பொழுதா கரைஞ்சுருமாம்!
ஓடி வந்து உன் மடியில் -உன் பிள்ளை
ஒய்யாரமாய் உறங்கிடுமாம்!
சேதி நானும் சொல்ல வந்தேன்
சேரும் இடம் செல்லப் போறேன்,
கூற வந்த செய்தியெல்லாம்
குறையில்லாமல் கூறிவிட்டேன் !

கண்டம் கடந்தும்
காவு வாங்கும்
கண்ணுக்கு தெரியா சிறு உயிரி!
காற்றிலே பறந்து வரும்
காலனது மறு பிறவி!

சில காலம் காத்திருப்போம்
சிறகுகளைப் பூட்டி வைப்போம்
நிலையில்லா வாழ்வதனின்
நிலையினை நாம் புரிந்திடுவோம்!
நிலமையது நேரானபின்
நின்னுயிர்க்கும் உதவிடுவோம்
மண்ணுலகில் உயர்ந்திடுவோம்!

– த.ச.பிரதீபா பிரேம், அட்லாண்டா, யு.எஸ்.ஏ.

A1TamilNews.com

From around the web