40 நிமிட பேச்சில் நாடே பாராட்டும் ஹீரோவான ராகுல் காந்தி!

ராகுல் காந்தியா இது… அவரா இப்படிப் பேசினார்? என காங்கிரஸ்காரர்களே வாய் பிளந்து நிற்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் கூட ராகுல் காந்தியின் பேச்சுக்கு அப்படியொரு வரவேற்பு. இன்று நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேசியது 39 நிமிடங்கள். அந்த அளவுதான் நேரம் ஒதுக்கினர். அவரை பப்பு என்று கிண்டல் செய்து வரும் பாஜகவினர் ராகுல் என்ன பேசிவிடப் போகிறார் என்றுதான்
 


ராகுல் காந்தியா இது… அவரா இப்படிப் பேசினார்? என காங்கிரஸ்காரர்களே வாய் பிளந்து நிற்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் கூட ராகுல் காந்தியின் பேச்சுக்கு அப்படியொரு வரவேற்பு.

இன்று நாடாளுமன்றத்தில் மோடி அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேசியது 39 நிமிடங்கள். அந்த அளவுதான் நேரம் ஒதுக்கினர். அவரை பப்பு என்று கிண்டல் செய்து வரும் பாஜகவினர் ராகுல் என்ன பேசிவிடப் போகிறார் என்றுதான் சாதாரணமாக இருந்தனர். ஆனால் இந்தியில் கேலியும் கிண்டலும் குத்தலும் குற்றச்சாட்டுமாய் ராகுல் காந்தி ஆற்றிய உரை பிரதமர் மோடியை மட்டுமல்ல… ஒட்டுமொத்த பாஜகவையே ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது என்றால் மிகையல்ல.

நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என பொய்யான வாக்குறுதி அளித்தாரே மோடி, அதில் ஆரம்பித்து, ஆந்திராவுக்கு இழைத்த நம்பிக்கை துரோகம், பணமதிப்பிழப்பு என்ற பெயரில் அரங்கேறிய அரைவேக்காட்டுத்தனம், வேலைவாய்ப்பு, விவசாயிகள் கடன், பெரும்தொழிலதிபர்கள் வங்கிகளுக்கு சாத்திய பட்டை நாமம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என ஒரு விஷயத்தையும் விட்டுவைக்கவில்லை ராகுல். வெளுத்து வாங்கினார்.

பிரதமர் மோடியால் ராகுல் காந்தியின் பேச்சைக் கவனிக்கவும் முடியவில்லை, கவனிக்காமல் புறக்கணிக்கவும் முடியவில்லை. அவர் முகத்தை அந்தப் பக்கம் திருப்பினால், “பிரதமரால் என் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. காரணம் அவர் சொன்ன பொய்கள்,” என பளீரென ராகுல் கேட்க, வேறு வழியின்றி ராகுலைப் பார்க்க வேண்டியதாயிற்று மோடிக்கு.

ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்த 39 நிமிடங்களும் மோடியால் மட்டுமல்ல, மொத்த பாஜகவினராலும் இருக்கையில்கூட அமர முடியவில்லை. அதுவும் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கொடுத்த அடி அத்தனை சாதாரணமானதல்ல.

ராகுலின் இந்த விஸ்வரூபத்தை காங்கிரஸும் எதிர்ப்பார்க்கவில்லை. அந்தக் கட்சியினருக்கு இப்போது ராகுல் காந்தி மிகுந்த நம்பிக்கை கொண்ட தலைவராக காட்சியளிக்கிறார். மொத்த காங்கிரசும் புத்துயிர் பெற்று எழுந்துள்ளது, இந்த 40 நிமிட பேச்சில்.

ஆனால் ராகுல் இப்போதுதான் இப்படிப் பேசுகிறாரா?

இல்லை… கடந்த சில ஆண்டுகளாகவே ராகுலின் பேச்சில் அழுத்தமும் பக்குவமும் அதிகரித்திருப்பதை அரசியல் ஆர்வலர்கள் கவனிக்கத் தவறவில்லை. அதனால்தான் அவரை கிண்டலடித்து, நம்பிக்கையிழக்கச் செய்யும் வேலைகளில் தீவிரமாக இறங்கினர் மோடி உள்ளிட்ட பாஜகவினர். அவரை பப்பு என்று கிண்டலடித்தும் பார்த்தனர். ஆனால் அந்தப் பப்பு இன்று வைத்த ஆப்பு அசாதாரணமானது.

ராகுல் வார்த்தைகளிலேயே சொன்னால், “பிரதமர் அவர்களே, நீங்கள் என்னை பப்பு என்று அழையுங்கள். நான் பப்புதான். ஆனால் அதற்காக நான் கோபித்துக் கொள்ள மாட்டேன். ஆனால் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா உங்களால்?”

பிரதமரால் ஒருபோதும் பதில் சொல்லவே முடியாது!பாஜக மட்டுமல்ல, யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை இன்று மக்களவையில் செய்தார் ராகுல். அது தனது அனல் பேச்சை முடித்ததும், நேராக பிரதமர் மோடியிடம் சென்று கட்டிப் பிடித்து அவரிடமே வாழ்த்தும் பெற்றது. இது ஒன்று போதும், ராகுல் காந்தி எந்த அளவு பக்குவமான தலைவராக உருவெடுத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள!

– விதுரன்
வணக்கம் இந்தியா ஸ்பெஷல்

From around the web