தெலுங்கு பட உலகை சேர்ந்த சிலர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு கொடுப்பது ஏன்? கோட்டா சீனிவாசராவ் கேள்வி

 
Kotta-Srinivas-Rao

தெலுங்கு பட உலகை சேர்ந்த சிலர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு கொடுப்பது ஏன் என்று பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு, நடிகைகள் ஜீவிதா ராஜசேகர், புஷ்பா, நடிகர் நரசிம்மராவ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி ஆதரவு கொடுத்து இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் அனைவருமே சினிமா தொழிலில் இருப்பதால், சிரஞ்சீவியின் ஆதரவை பெறுபவரே வெற்றி பெறுவார் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பான பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ், பெயரை குறிப்பிடாமல் (சிரஞ்சீவியை) தாக்கி பேசியிருக்கிறார்.

“பிரகாஷ்ராஜ் ஆந்திராவை சேர்ந்தவர் அல்ல. அவர் கர்நாடகாவை சேர்ந்தவர். கன்னட நடிகர் சங்கத்தில் அவர் போட்டியிடட்டும். இங்கே போட்டியிட அவருக்கு உரிமை இல்லை. தெலுங்கு பட உலகை சேர்ந்த சிலர் அவருக்கு ஆதரவு கொடுப்பது ஏன்? என்று புரியவில்லை. அவர்கள் நினைத்தால், போட்டியே இல்லாமல் தலைவரை தேர்ந்தெடுக்கலாம்.

அப்படி ஒருமனதாக தேர்ந்தெடுப்பதை மூத்த நடிகர்கள் விரும்பவில்லை போலும். தெலுங்கு நடிகர் சங்கத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்தவரே தலைவராக இருக்க வேண்டும். தெலுங்கு பட உலகில் பிரபலமாக இருக்கும் ஒருவர் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர் தனது ஆதரவை வாபஸ் பெற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

From around the web