தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்
சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் வினோத். தனது முதல் படைப்பிலேயே அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். அப்படத்தில் வசனங்கள் அனைத்தும் அனைவராலும் பாராட்டை பெற்றது.
கொஞ்சம் இடைவெளி எடுத்து கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கியுள்ளார் வினோத். 90 கால கட்டத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’.
ஐ பி எஸ் பயிற்சியில் முதல் மாணவராக இருக்கிறார் கார்த்தி. பயிற்சி முடித்ததும் தூத்துக்குடியில் டி எஸ் பி-யாக பொறுப்பேற்கிறார். நேர்மையான அதிகாரியாக பணியாற்றும் இவர், அதிகாரிகளால் பல முறை டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.
தனது காதல் மனைவியான ரகுல் ப்ரீத் சிங்-குடன் பல ஊர்களில் பணி செய்து சுற்றுகிறார். அப்படியாக அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் டி எஸ் பி-யாக பொறுப்பேற்கிறார்.
அப்பகுதியில், தனியாக இருந்த வீட்டில் உள்ளவர்களைக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையர்கள் களவாடிச் செல்கின்றனர். அதைப்பற்றி விசாரிக்கும்போதே அதேபோல் இன்னொரு சம்பவம் நடக்கிறது. இப்படி தொடர்ச்சியாக கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறுகிறது.
அந்த கொடூர கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர பணியில் ஈடுபடுகிறார் கார்த்தி. அவர்கள் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இதற்காக தன் போலீஸ் டீமுடன் வடஇந்தியா செல்லும் கார்த்தி கொள்ளையர்களைக் கண்டுபிடித்தாரா, அங்கு அவருக்கு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
பத்திரிக்கை ஒன்றில் வெளியான ஒரு செய்தியை வைத்து கதையை நகர்த்திருக்கிறார் இயக்குநர் வினோத். இந்த கதைக்காக அவருக்கான மெனக்கெடல் எவ்வளவு என்பதை இப்படத்தில் காணலாம். படத்தின் கதைகள் அனைத்தும் உண்மை சம்பவம் என்பதால் அதற்காகவே பல வருடங்கள் காத்திருந்து படத்தினை இயக்கியிருக்கிறார்.
இந்த வழக்கை கையில் எடுக்கும் போதே ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அந்த பரபரப்பு படம் முடியும் வரை செல்கிறது. கார்த்தியின் உழைப்பு அதிகமாக தெரிகிறது. வட மாநிலத்தில் நடக்கும் காட்சிகளில் வெயிலில் தன்னை வாட்டி வதைத்து நடித்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகள் அனைத்திலும் அதிரடிதான். ரகுல் ப்ரீத் சிங்கிற்கு உருப்படியான ஒரு தமிழ்ப் படம் கிடைத்துவிட்டது. கார்த்தியுடனான ரொமான்ஸ் காட்சிகளில் அதிகமாக ஃபீல் செய்ய வைக்கிறார். காதல் காட்சிகளில் இருவருக்குமான ஹெமிஸ்ட்ரி நல்லாவே கைகொடுத்திருக்கிறது.
இன்ஸ்பெக்டராக வரும் போஸ் வெங்கட் மிகவும் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக போலீஸ் அதிகாரிகள் சுற்றும் போது அதிகாரிகள் ஒரு வழக்கிற்காக இவ்வளவு மெனக்கெடுகிறார்களா..? என்று கலங்க வைத்துவிடுகிறது.
ஜிப்ரானின் பின்னனி இசை விறுவிறுப்புக்குப் பலம் சேர்க்கிறது. ஆனால் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம்தான்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்திருக்கிறது. கிரேட்…
தீரன் அதிகாரம் ஒன்று – பரபர வேட்டை.