தமிழ் சினிமா எப்போதுமே திறமையானவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் - நடிகை ஆஷா சரத்

 
Asha-Sharath

தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது என நடிகை ஆஷா சரத் கூறினார்.

மலையாள நடிகையான ஆஷா சரத் ‘திரிஷியம்’ படத்தில் நடித்ததத்தன் மூலம் பிற மொழி ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்த ஆஷா சரத்தின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெளியான நிலையில் இந்த படத்திலும் ஆசா சரத் நடித்திருந்தார்.

மலையாளத்தை போலவே தமிழிலும் இவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பறிவு’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுகுறித்து ஆஷா சரத் கூறியதாவது,

“தமிழ்த்துறையில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரத்தைப் காண மிகுந்த  மகிழ்ச்சி அளிக்கிறது. திரிஷ்யம் படத்தொடர் எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு அற்புதமானதொரு பாத்திரத்தை வழங்கினார்.

அந்த கதாபாத்திரம் ஒரு வலுவான போலீஸ் அதிகாரியாகவும் அதே நேரம் மனதளவில் உடைந்து போன தாயாக, குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் பாத்திரமாகவும் இருந்தது. அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதன் தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் திரையுலகில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நடிப்பை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் பாராட்டிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்போது, அன்பறிவு படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருவது என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா எப்போதுமே  திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது.

இது மற்ற மாநில திரைத்துறை நடிகர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஒரு அழகான பாத்திரத்தை அளித்து, அவர்களை அபிமான நடிகர்களாக மாற்றி வருகிறது. இங்குள்ள அனைவரின் அன்பையும் பாராட்டையும் நான் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அடிப்படையில் நான் பரதநாட்டிய நடனக் கலைஞர், கேரளாவில் நடக்கும் அனைத்து சர்வதேச விழாக்களிலும் நான் பங்கேற்று நடனமாடியுள்ளேன். என் நடனத்திறமை குறிப்பிடத்தக்க வகையில், நடிப்பின் நுணுக்கங்களை வெளிப்படுத்தவும், நடிகையாக எனது வாழ்க்கையை வடிவமைப்பதிலும், எனக்கு பேருதவியாக இருந்துள்ளது.”  என கூறினார்.

From around the web