‘ராதே ஷ்யாம்’ அப்டேட் வரலை... விரக்தியில் தற்கொலை கடிதம் எழுதிய ரசிகர்

 
Prabhas-fan-suicide-letter

'ராதே ஷ்யாம்' படம் குறித்த அப்டேட் எதையும் படக்குழு வெளியிடாததால் விரக்தி அடைந்த ரசிகர் ஒருவர் தற்கொலைக் கடிதம் எழுதியுள்ளார்.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராதே ஷ்யாம்’. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த மாதம் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீஸரைப் படக்குழு வெளியிட்டது. வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த தீவிர பிரபாஸ் ரசிகர் ஒருவர் படக்குழு மீது குற்றம் சாட்டி தற்கொலைக் கடிதம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில் ‘ராதே ஷ்யாம்’ படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும், தன்னுடைய தற்கொலைக்கு யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், இயக்குநர் ராதா கிருஷ்ணகுமாரும்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் ஒரு தற்கொலைக் கடிதம் எழுதுவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும், தன்னுடைய மரணத்துக்குப் பிறகாவது ‘ராதே ஷ்யாம்’ குழுவினர் தொடர்ந்து அப்டேட் கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இந்தக் கடிதம் வைரலாகி வருகிறது.

From around the web