லட்சத்தீவை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு..!

 
Aisha-Sultana

லட்சத்தீவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அண்மையில் லட்சத்தீவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பல ஹேஸ்டாக்குகள் வலம் வந்தன. ஒன்றிய அரசு லட்சத்தீவுக்கு புதிய நெருக்கடி கொடுத்து வருவதாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த விவாகாரத்தில் பெண் இயக்குநர் ஒருவர் லட்சத்தீவில் ஒன்றிய அரசு கொரோனாவை பரப்பியதாக கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண் இயக்குனருக்கு புகாரும் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவு மக்கள் மீது கொரோனாவை உயிரி ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆயிஷாவின் பேச்சு நாட்டுக்கு எதிரான செயல் எனக் கூறி லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் கவரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்துத் தேசத்துரோகம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஆகிய பிரிவுகளில் ஆயிஷா சுல்தானா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக ஆயிஷா சுல்தானாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்தீவில் கடந்த ஆண்டு ஒருவருக்குக் கூட கொரோனா இல்லாத நிலையில், டிசம்பரில் நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் பொறுப்பேற்ற பிறகு, விதிகள் தளர்த்தப்பட்டதால் இதுவரை மொத்தம் எட்டாயிரத்து முந்நூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

From around the web