இசைஞானி இளையராஜாவுடன் இணையும் இயக்குநர் சுசி கணேசன்..!

 
vanjam-theerthayada

சுசி கணேசன் இயக்கும் ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.

‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் சுசி கணேசன். அதனைத் தொடர்ந்து, ‘விரும்புகிறேன்’, ‘திருட்டுப் பயலே’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இறுதியாக 2017-ம் ஆண்டு வெளியான ‘திருட்டுப் பயலே 2’ படத்தை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை சுசி கணேசன் வெளியிட்டிருந்தார். ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் சுசி கணேசன் இணையவுள்ளார். இதற்காக இயக்குநர் சுசிகணேசன் மும்பையிலிருந்து சென்னை வந்து இளையராஜாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் சுசி கணேசன் கூறியதாவது,

“கிராமத்து வாழ்க்கையில் ஊருணி தண்ணீரைப் பருகி வளர்ந்ததைப் போல இளையராஜா சாரின் இசையையும் உணவாக உண்டு வளர்ந்தவன் என்ற முறையில் எனது ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு அவர் இசையமைப்பதைப் பெருமையாக எண்ணுகிறேன். என்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா சார் இசையமைக்க வேண்டும் என்று நான் கண்ட கனவு தற்போது நான் முதன்முதலாகத் தயாரிக்கும் படத்தில் நிறைவேறியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் 1980-களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக சுசி கணேசன் கூறியுள்ளார்.

From around the web