இந்தித் திணிப்பு போராட்டம் ரத்து ஸ்டாலினுக்கு தோல்வியா? ரஜினிக்கு வெற்றியா?

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை, ஆளுநரின் சந்திப்புக்குப் பிறகு தள்ளி வைப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து திமுகவினரிடம் சோர்வு ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்குள் அதிருப்தி என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகிறது. நாங்குனேரி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்திருப்பதும் இதன் பின்னணியில் தான் என்று கராத்தே தியாகராஜனும் போட்டுத் தாக்கியுள்ளார். திமுகவை பாஜக மிரட்டி விட்டார்கள். கனிமொழி, ராஜா மீதான 2 ஜி வழக்குகள் பற்றி எல்லாம் ஆளுநர் மூலம் தகவல்
 

இந்தித் திணிப்பு போராட்டம் ரத்து ஸ்டாலினுக்கு தோல்வியா? ரஜினிக்கு வெற்றியா?

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை, ஆளுநரின் சந்திப்புக்குப் பிறகு தள்ளி வைப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து திமுகவினரிடம் சோர்வு ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்குள் அதிருப்தி என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகிறது. நாங்குனேரி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்திருப்பதும் இதன் பின்னணியில் தான் என்று கராத்தே தியாகராஜனும் போட்டுத் தாக்கியுள்ளார்.

திமுகவை பாஜக மிரட்டி விட்டார்கள். கனிமொழி, ராஜா மீதான 2 ஜி வழக்குகள் பற்றி எல்லாம் ஆளுநர் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாக  அரசியல் காரணங்கள் கூறப்படுகிறது. 

2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம்  2 ஜி வழக்கிலிருந்து ராஜாவும், கனிமொழியும் வழக்கிலிருந்து விடுதலை ஆனார்கள். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் மேல்முறையீட்டு மனு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. முன்னதாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையைத் தான் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட ரத்து விவகாரத்தில் குறிப்பிடுகிறார்கள்.மேல் முறையீடு போனாலும் வெற்றி பெறுவோம் என்று முன்னதாக ராஜா கூறியிருந்தார்.

சறுக்கல்

ஆனால் ஸ்டாலின் சறுக்கியது அவருடைய திட்டமிடலில் தான் என்று கருத வேண்டியுள்ளது. ஒரு சனிக்கிழமை அமித் ஷா இந்தி தான் இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், போராட்டத்தை நிதானமாக அடுத்த வெள்ளிக்கிழமை வரை தள்ளிப் போடுகிறார். அதற்கு ஆதரவும் பெருகிக் கொண்டிருந்ததை மறுக்க முடியாது.

இடைப்பட்ட காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வரக்கூடும் என்பதை எதிர்பார்க்கத் தவறிவிட்டார்கள் ஸ்டாலினும் அவருடைய கட்சித் தலைவர்களும். ஸ்டாலின் அறிவித்த போராட்டத்தினால் தான், அமித் ஷாவின் கருத்துக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

அப்படி ஒரு சூழ்நிலை உருவாகியதனால் தான் ரஜினிகாந்த் தனது கருத்தைச் சொன்னார். ஒன்றை கவனிக்க வேண்டும். தானாக வலிய பத்திரிக்கையாளர்களை வீட்டிற்கு முன்பு அழைத்து ரஜினிகாந்த் பேட்டி கொடுக்க வில்லை. விமான நிலையத்தில் கூட, பத்திரிக்கையாளர்கள் சொல்லுங்க என்று கேட்ட போது ‘எதைப் பற்றி’ என்று கேட்கிறார். வலியப் போய் இந்தித் திணிப்பு பற்றி கருத்து சொல்லவில்லை.

இந்தித் திணிப்பு பற்றி கருத்து கேட்ட பிறகே அதற்கான பதிலைச் சொன்னார் ரஜினிகாந்த். அந்த பதில் நேரடியாக அமித்ஷாவுக்கு சொல்லப்பட்ட பதில் தான் என்பதில் இரண்டாவது கருத்தே கிடையாது. அமித் ஷாவுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்து விட்டது.

திமுக போராட்டம் நடந்து அதன் பிறகு அமித் ஷா மறுப்பு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்திருக்கும். ஒரு வேளை திங்கட்கிழமையோ அல்லது புதன் கிழமையோ திமுகவின் போராட்டம் நடத்தப் பட்டிருந்தால்,  அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகி இருக்கலாம்.

நேரம் முக்கியம் – ரஜினி

”அரசியலில் கடின உழைப்பு மட்டும் போதாது. நேரம் மிகவும் முக்கியமானது,” என்று விஜயகாந்த் கட்சி தொடங்கி போட்டியிட்ட போது, அப்போது வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக் கொண்டே சொன்னார் ரஜினிகாந்த்.

அதே தான் இப்போது ஸ்டாலினுக்கும் நடந்துள்ளது. அமித் ஷா பின் வாங்கமாட்டார் என்பது ஸ்டாலினின் கணிப்பு. அமித் ஷா தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்து விட்ட பிறகு அங்கு போராட்டத்திற்கு தேவையே இல்லாமல் போய் விட்டது. ஆளுநரின் அறிவுரையை மீறி போராட்டம் நடந்திருந்தாலும் பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்காது. மத்திய உள்துறை அமைச்சரின் பின்வாங்கல் அவருக்கும் சறுக்கல் தான். தற்போதைய இந்தித் திணிப்பு எதிர்ப்பு விவகாரத்தில் வெற்றி ரஜினிக்கு மட்டுமே.

இன்னொன்று, ஆளுநரை சந்தித்து விட்டு வந்த உடனேயே அங்கேயே பத்திரிக்கையாளர்கள் முன்பு போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது என்று கூறியதிலும் ஸ்டாலின் சறுக்கியுள்ளார். கூட்டணிக் கட்சிகளை ஆலோசித்து விட்டு அறிவித்து இருந்தால் வேறு விதமாக ஆகியிருக்கும். அல்லது கூட்டணிக் கட்சி சார்பிலும் சிலரை அழைத்துச் சென்றிருந்தாலும் அது கூட்டணி முடிவாக இருந்திருக்கும்.

ஆக, பந்தை வீசியவர் மு.க.ஸ்டாலின். அதை சிக்ஸருக்கு விளாசியவர் ரஜினிகாந்த். அதே பந்தில் அவுட் ஆனவர் அமித் ஷா என்பது தான் அரசியல் கிரிக்கெட்.

– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்

From around the web