சான் ஃப்ரான்சிஸ்கோ : உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான்(ரமலான்) பண்டிகை அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ – ப்ரீமாண்ட் நகரில் லேக் எலிசபெத் மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று காலை நடைபெற்ற சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருவரை ஓருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இதேபோன்று சிறப்பு தொழுகை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது
இஸ்லாமியர்கள் ஐந்து கட்டாயக் கடமைகள் கடைப்பிடிக்கிறார்கள் இறைவன் – இறைத்தூதர் மீதான உறுதி பிரகடணம், ஐந்து வேளை தொழுகை, ஜகாத் கொடுத்தல் (வருமானத்தில் ஒரு பகுதி ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது), ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது மற்றும் வசதி வாய்ப்பு இருந்தால் வாழ்க்கையில் ஒரு முறையாவது மெக்கா, மதினா நகரத்திற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது என்பது அந்த கடமைகள் ஆகும்.
அந்த வகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ரமலான் ஈகைத் திருநாள். மற்றொன்று பக்ரீத் பண்டிகை எனும் தியாகத் திருநாள். இந்த உலகில் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பசி பட்டினியால் வாடும் மக்களின் ஏழ்மையை உணர்த்தவும் பசியின் தாக்கத்தை அறியும் உன்னத நோக்கில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது.
பசி தாகத்துடன் நோன்பு வைத்து பின் பெருநாள் சிறப்பு தொழுகைக்கு செல்லுமுன் “பித்ரா” எனும் வரியை பணமாகவோ தானியமாகவோ, குடும்பத்தில் உள்ள அனைவரும் செலுத்திட வேண்டும். பின்பு இந்த பித்ரா பணம் ஏழைகளுக்கு பிரித்து விநியோகம் செய்யப்படும். வசதி வாய்ப்பில்லாத ஏழைகள் தங்களால் இந்த இனிய நாளை கொண்ட முடியவில்லையே என்று ஏங்கி தவிப்பதை தவிர்க்க, இந்த பித்ரா பணம் அவர்களுக்கு சிறிய அளவில் உதவியாக இருக்கும். அவர்களும் திருநாளன்று, நல் உணவருந்தி புத்தாடை உடுத்தி சந்தோசமாக அந்த ஒரு நாளாவது இருக்க வேண்டும் என்கின்ற சமதர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது தான் “பித்ரா”.
இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதால் பெறுபவரையும் , கொடுப்பவரையும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி கொள்ள வைப்பது தான் ஈகையின் குணம்.
இந்த இனிய ரமலான் மனித நேயத்தை போற்றும் வகையில் தான-தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். திருநாளன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது, மேலும் திருநாளன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என இறைத்தூதர் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இன்னும் உலகத்தில் ஒரு சாரார் ஒரு வேலை உணவின்றி பட்டினியால் வாடி தவிக்கும் சூழல் இருப்பதை நினைக்கும் போது, நம் ஆடம்பர விழாக்களை கொஞ்சம் தவிர்க்கலாமே என்றும் தோன்றுகிறது.
உலகில் உள்ள அனைத்து மதங்களும் இந்த அடிப்படை சித்தாந்தத்தை தான் போதிக்கின்றன. மனிதன் தன் சுயலாபத்திற்கு அதனை கொச்சைப்படுத்தி, கொள்கைகளை மாசுபடுத்தி விட்டான். இருப்பினும் மானிட சமுத்தில் மனித நேயம் இதுபோன்ற திருவிழாக்களில் புதுப்பிக்கப்படுகிறது என்பது உண்மையே. மத மாச்சர்யங்களை தவிர்த்து தங்களின் நண்பர்களை அழைத்து வாழ்த்துவதும் அவர்களுக்கு விருந்து படைத்தது மகிழ்வதும் மட்டற்ற மகிழ்ச்சி அல்லவா!.
குறிப்பாக, என்றோ ஒரு நாள் கூடி அமர்ந்து ஒன்றாய் உண்டு ரசித்த ரமலான் பிரியாணியை நினைவு கூர்ந்து, வாழ்த்து கூறும்போது, எனக்கு உடனே மனதில் உதிர்த்த கருத்து, நம் நண்பர்களின் அடிமனதில் நம் உறவு வேர்கள் எவ்வளவு ஆழமாக வலுவாக வேரூன்றி இருக்கின்றன என்பதை தான் உணர்த்தியது.
இனிய ரமலானே உன்னை கொண்டாட எத்தனையோ காரணங்கள் உண்டு .இந்த கொண்டாட்டத்திற்கு மட்டும் உனக்கு நான் நன்றி சொல்லவில்லை. பல வருடங்களாக சந்திக்கவிட்டாலும், பல மாதங்களாக அவர்களிடம் நான் தொடர்பில் இல்லாவிட்டாலும், ரமலான் என்றவுடன் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து நண்பர்களிடம் என்னை நினைவூட்டினாயே, இதற்காவே இறைவா உனக்கு நன்றி சொல்லி நான் கொண்டாடுகிறேன். ரமலானே நீ பண்டிகையாக மட்டும் இல்லாமல் எங்களுக்கு மிக பெரிய உறவு பாலமாக இருக்கிறாயே அதற்காகவும் உனக்கு நன்றி சொல்லி நான் கொண்டாடுகிறேன்!.
ரமலானே நீ பண்டிகையாக மட்டும் இல்லாமல், எங்களுக்கு ஏழைகளையும் அவர்களின் பசி பட்டினியையும் உணர்த்தி அவர்களையும் நினைவுப் படுத்தினாயே அதற்காகவும் உனக்கு நன்றி சொல்லி நான் கொண்டாடுகிறேன்!. ரமலானே நீ பண்டிகையாக மட்டும் இல்லாமல் எங்களுக்கு தனி மனித ஒழுக்கத்தை பேண கற்றுக் கொடுத்தாயே அதற்காகவும் உனக்கு நன்றி சொல்லி நான் கொண்டாடுகிறேன்!.
ரமலானே நீ பண்டிகையாக மட்டும் இல்லாமல் ஈகை குணம் எவ்வளவு முக்கியம் என்றும் அதனால் ஏற்படும் பொருளாதார சுழற்சியையும் மாற்றத்தையும் கற்றுக்கொடுத்தாயே அதற்காகவும், உனக்கு நன்றி சொல்லி நான் கொண்டாடுகிறேன்!.
ரம்ஜான் என்பது உணவுக்கான உறவு அல்ல, உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்.
– அபுகான், சான் ஃப்ரான்சிஸ்கோ (யு.எஸ்)