ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு இல்லையா?
அமெரிக்க அதிபராக இரண்டாவது தடவையாக டொனால்ட் ட்ரம்ப் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் நடைபெற உள்ள இந்த விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயர் இன்னும் இடம் பெறவில்லை.
அழைப்பிதழைப் பெற்றுவிட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் வாஷிங்டனில் முகாமிட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதையொட்டி பல்வேறு மீம்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடியுடன் மிகவும் நட்புறவுடன் இருந்தார் டொனால்ட் ட்ரம்ப். அவர் கடந்த முறை மீண்டும் அதிபராக போட்டியிட்ட போது, அவருக்காக ஹுஸ்டன் நகரில் ஹௌடி மோடி என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி நேரடியாக ஆதரவுப் பிரச்சாரம் செய்தார் மோடி.
கொரானா பரவுகிறது என்று தெரிந்த நிலையிலும் குஜராத்திற்கு ட்ரம்ப் ஐ அழைத்து வந்து நமஸ்தே ட்ரம்ப் என்ற மாபெரும் நிகழ்ச்சியை நடத்தி நட்பை நிலைநாட்டினார் மோடி. ஆனால் ட்ரம்ப் தோல்வியுற்று பைடன் அதிபர் ஆகிவிட்டார். பைடனுடன் நட்புறவை வளர்த்துக் கொண்ட மோடி, பைடனின் மனைவி ஜில் க்கு மிக விலை உயர்ந்த வைர நகையை பரிசளித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரம்பின் மனைவி மெலனிக்கு இத்தகைய பரிசுப்பொருள் வழங்கியதாகத் தெரியவில்லை. இதுவும் ட்ரம்ப் தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
இந்த முறை தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தல் நேரத்தில் அமெரிக்கா சென்றிருந்த மோடியை ட்ரம்ப் பிரச்சார நிகழ்ச்சிக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் மிகவும் ஆவலாக மோடி வந்து விடுவார் என்று அறிவித்தும் உள்ளார். ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முட்டுக்கட்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் அதிபர் ஆகிறார் ட்ரம்ப்.
தன்னை மதிக்காதவர்களை மன்னிக்கத் தெரியாதவர் ட்ரம்ப் என்ற கூற்றும் உண்டு. பிரதமர் மோடியின் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்பால் அவரை அதிபர் பதவியேற்பு விழாவுக்கு அழைக்காமல் புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில், ட்ரம்ப்பின் புதிய ஆட்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியுள்ளார் ட்ரம்ப்.
இந்தியா அமெரிக்க நட்புறவைப் பேணும் வகையில் இந்தியப் பிரதமருக்கு அழைப்பு வருமா? அல்லது ட்ரம்ப் மோடி தனிப்பட்ட காரணங்களால் அழைப்பு வராமல் போகுமா என்பது அமெரிக்க இந்தியர்களிடையே பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இந்தியப் பிரதமர் மட்டுமல்லாமல் அமெரிக்க இந்தியர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.