நான்கு மாதங்களாக எறும்புகளுடன் போராடும் பெண்.. பிரான்சில் வினோத சம்பவம்
பிரான்சில் பெண் ஒருவர் நான்கு மாதங்களாக எறும்புகளுடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பிரான்சிலுள்ள நியூ அக்விடைன் பிராந்தியத்தின் ஹூர்டின் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்து வருபவர் பெனடிக்ட் ஏய்கீயூம் (54). இவர் கடந்த ஆண்டு, அதாவது, 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தன் வீட்டின் பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுற்றி எறும்புகள் கூட்டமாக காணப்படுவதைக் கவனித்துள்ளார். பொதுவாக அப்படிப்பட்ட இடங்களில் எறும்புகள் இருக்காது என்பதால் வியப்படைந்துள்ளார் அவர்.
மறுநாள் வீட்டு வாசல் முழுவதும் எறும்புகளாக இருந்துள்ளன. பின்னொருநாள் டியூப் லைட்டின் பின்னாலிருந்து எறும்புகள் வரத்துவங்கியுள்ளன. அந்த எறும்புகள் மத்தியதரைக்கடல் பகுதி எறும்புகள் (Mediterranean ants Crematogaster scutellaris) என அழைக்கப்படுகின்றன. அவை வீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. ஆகவே, அவற்றை ஒழிக்க காப்பீட்டு நிறுவனம் உதவாது. ஆகவே, நான்கு மாதங்களாக தினமும் எறும்புகள் கட்டும் கூடுகளை அழித்துக்கொண்டே இருப்பதாக தெரிவிக்கிறார்.
நிலத்தடி நீர் மட்டம் காரணமாக சில நேரங்களில் இதுபோல் எறும்புகள் வீட்டுக்குள் வரக்கூடும் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். ஆனால், அவற்றை ஒழிக்க நிரந்தர தீர்வு எதுவும் இருந்தாற்போல் தெரியவில்லை. ஒரே ஒரு நல்ல விடயம், அந்த எறும்புகள் கடிப்பதோ அல்லது உணவுத்துணுக்குகளை தூக்கிச் செல்வதோ இல்லையாம்!