உக்ரைன் விவகாரத்தில் தனித்து விடப்படும் அமெரிக்கா?

வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வோலோடிமெர் ஸெலன்ஸ்கியுடனான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சந்திப்பு, ஒருத்தரையொருத்தர் குற்றம்சாட்டிக் கொண்டு முடிந்தது. ஒரு சில இடங்களில் அதிபர் ட்ரம்பின் பேச்சுக்கள் உக்ரைன் அதிபரை மிரட்டும் தொனியில் கூட இருந்தது. மூன்றாம் உலகப்போரை தூண்டுகிறீர்கள். உங்களுக்கு நாங்கள் நல்ல வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம். உங்கள் நாடு அழிந்து கொண்டிருக்கிறது போன்ற காட்டமான கருத்துக்களை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார்.
ரஷ்யா ஆக்கிரமிப்பின் போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று ஸெலன்ஸ்கி திருப்பிக் கேட்க அப்போது ஒபாமா ஆட்சியில் இருந்தார் என்று பழியை அவர் மீது போட்டதுடன் முன்னாள் அதிபர்கள் ஒபாமாவையும் பைடனையும் கடுமையாக விமர்சித்தார் அதிபர் ட்ரம்ப். கடும் ஏமாற்றத்துடனும் அவமானத்துடனும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் உக்ரைன் அதிபர்.
வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பு உலகத்தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமெர் ஸெலன்ஸ்கிக்கு ஆதரவாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். தொடர்ந்து இந்திலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் உக்ரைன் அதிபருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான், ஜெர்மனியின் அடுத்த அதிபர் என கருதப்படும் ஃப்ரெட்ரிச் மெர்ஸ், டென்மார்க் அதிபர் மெட் ஃப்ரெட்ரிக்சன், நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் மோடி என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று தெரியவில்லை! ஆனால், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக உலகநாடுகள் திரும்புவது போலத்தான் தெரிகிறது