எலான் மஸ்க் கின் டெஸ்லா கார்களுக்காக வரியைக் குறைக்கிறாரா பிரதமர் மோடி?

 
Musk Modi

அமெரிக்காவுக்கு அரசுப்பயணமாக சென்ற பிரதமர் மோடி அதிபர் ட்ரம்ப் ஐ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பெரும் பணக்காரரும் ட்ரம்ப் அரசின் முக்கிய நிர்வாகியாகவும் இருக்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஐயும் சந்தித்தார் பிரதமர் மோடி. மஸ்க் கின் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களும் கொடுத்தார் பிரதமர் மோடி.

அதிபர் ட்ரம்ப் பும் எலான் மஸ்க் கும் இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு உலகத்திலேயே மிகவும் அதிகமான வரி விதிப்பதாக குற்றம் சாட்டினர். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 110 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக எலான் மஸ்க் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். அமெரிக்காவுடன் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இரு தரப்பு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரியை குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது. அதிபர் ட்ரம்ப் பும் இதை உறுதி செய்துள்ளார்.

எலான் மஸ்க் கின் டெஸ்லா நிறுவன கார்கள் இந்திய சந்தையை குறிவைத்துள்ளதாகவும் அதனால் தான் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி கூடத்தை தொடங்க எலான் மஸ்க் பல்வேறு மாநிலங்களை ஆய்வு செய்து வருவதாகவும், தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரியை குறைப்பதற்கு இந்தியாவின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.