சிலியில் பயங்கர காட்டுத்தீ.. பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு

 
Chile

சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறி உள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

Chile

இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி மடிந்தன. அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியது. இதில் அங்குள்ள 3 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின.

இந்த நிலையில் சிலியில் எரியும் காட்டுத் தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த தீயை அணைப்பது சவாலாக உள்ளது என்றும் பல உடல்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும், அடையாளம் காண்பது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடயவியல் ஊழியர்கள் காணாமல் போன உறவினர்களைப் புகாரளித்த நபர்களிடமிருந்து மரபணுப் பொருட்களின் மாதிரிகளை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Chile

தீயை அணைக்கும் பணியில் மீட்பு படையினருக்கு உதவும்படி பொதுமக்களை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் கேட்டுக்கொண்டார். வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில் வெப்பநிலை 104 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

From around the web