பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கி கருவிகள் வெடிப்பு.. 3 பேர் பலி.. லெபனானில் அடுத்த அதிர்ச்சி!
லெபனானில் நேற்று பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்த நிலையில், இன்று வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்புல்லா, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், லெபனானில் நேற்று மதியம் 3.30 மணியளவில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 2,800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
காசா போர் தொடங்கிய பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பினரை செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலாக பேஜர் கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அந்த கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியது லெபனானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், லெபனானில் இன்று வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் அதிக வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 100 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Live footage from funeral of a #Hezbollah terrorist in #Lebanon this afternoon shows simultaneous explosion of handheld radio devices of other terrorists who were present there after #Israel Defense Force detonated them. These terrorists can no longer feel safe anywhere anytime👇 pic.twitter.com/UYTvtc3WZ4
— Babak Taghvaee - The Crisis Watch (@BabakTaghvaee1) September 18, 2024
இன்று வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கி கருவிகளையும், நேற்று வெடித்த பேஜர் கருவிகளையும் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா அமைப்பினர் இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இருக்கலாம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.