பழங்குடியினர் இடையே பயங்கர மோதல்.. 64 பேர் படுகொலை.. பப்புவா நியூ கினியாவில் பயங்கரம்

 
Papua New Guinea

ஆஸ்திரேலியாவின் அருகில் உள்ள பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் நேற்று பழங்குடியினரில் இரு பிரிவினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் பப்புவா நியூ கினியா என்ற தீவு நாடு அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் அதிக அளவில் இங்கு வசித்து வருகின்றனர். பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோரேசெபியில் இருந்து 600 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வபாக் என்ற நகரம் மலைப்பகுதிகள் நிறைந்தது.

இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் இடையே நிலம் தொடர்பாக நீண்ட காலமாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பழங்குடியின குழுக்கள் இடையே நடைபெற்ற மோதலில் 64 பேர் உயிரிழந்தனர். பழங்குடியின மக்கள் இடையே நடந்த மோதலில் இரு தரப்பினரும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

PNG

மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலைகளிலும் ஆற்றங்கரையிலும் ஆங்காங்கே கிடந்தன. அந்த உடல்களை போலீசார் டிரக்குகளில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

2022 பொதுத்தேர்தலுக்கு பிறகு எங்கா மாகாணத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ளது. தேர்தல் மோசடி மற்றும் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக நாடு முழுவதும் வன்முறை ஏற்பட்டுள்ளது. பழங்குடியினரிடையே சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டதாக எங்கா கவர்னர் பீட்டர் இபாடாஸ் தெரிவித்தார்.

PNG

பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார். மேலும், பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

From around the web