வேம்பயர் ஃபேஷியலால் 3 பெண்களுக்கு எச்ஐவி.. இளம் வயதினரே உஷாரா இருங்க!

 
New Mexico

அமெரிக்காவில் வேம்பயர் ஃபேஷியல் செய்து கொண்ட 3 பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

செலிபிரிட்டி பேஷியல் என அழைக்கப்படும் வேம்பயர் ஃபேஷியல் ஒரு காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மட்டும் பிரபலமாக இருந்தது. ஆனால் இப்போது வேம்பயர் ஃபேஷியல் இந்தியாவிலும் டிரெண்டாகி வருகிறது. ஏன் சென்னை, கோவை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கூட முகப்பொலிவுக்கான வேம்பயர் ஃபேஷியல் சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வருகிறது.

வேம்பயர் ஃபேஷியல் சிகிச்சை முறை என்பது முற்றிலும் வித்தியாசமானது. பொதுவாக சலூன்களில் நாம் பேஷியல் செய்து கொள்ளும்போது க்ரீம்கள் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த வேம்பயர் ஃபேஷியலுக்கு உடலில் உள்ள ரத்தம் தான் பயன்படுத்தப்படும். அதாவது இந்த சிகிச்சையை பெற விரும்புவோரின் உடலில் இருந்து அதிகபட்சமாக 8 மில்லி வரையிலான ரத்தம் ஊசி மூலம் எடுக்கப்படும். இப்படி பெறப்படும் ரத்தத்தில் பிளாஸ்மாவை தனியே பிரித்து ஊசி மூலம் முகத்தில் செலுத்தப்படும்.

USA

இந்த சிகிச்சைக்கு முகத்தில் ஊசி பயன்படுத்தப்படும்போது வலி ஏற்படலாம். இந்த வலியை உணராமல் இருக்க சிகிச்சை பெறுவோருக்கு அனஸ்தீசியா கொடுக்கப்படும். அதன்பிறகு ஊசி உதவியுடன் வேம்பயர் ஃபேஷியல் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சைக்கு ரூ.15 முதல் 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிகிச்சை அளிக்கும் ஸ்பா, கிளினிக்குகளை பொறுத்தும், அங்குள்ள வசதிகளின் அடிப்படையிலும் கட்டணம் என்பது மாறுபடும்.

இந்நிலையில் தான் வேம்பயர் ஃபேஷியல் சிகிச்சை செய்து கொண்ட 3 பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஸ்பாவில் வேம்பயர் ஃபேஷியல் செய்து கொண்டவர்களுக்கு தான் எச்ஐவி பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை அமெரிக்காவில் சிடிசி என அழைக்கப்படும் நோய் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக சிடிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் ஸ்பா ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஸ்பாவில் வேம்பயர் ஃபேஷியல் செய்த பெண் எச்ஐவியால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு மேலும் 2 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 2 பேரும் ஒரே ஸ்பாவில் வேம்பயர் ஃபேஷியல் செய்தவர்கள். ஸ்பா பற்றி விசாரித்தபோது அது உரிய அனுமதியின்றி லைசென்ஸ் இன்றி இயங்கியது தெரியவந்தது.

CDC-America

இதையடுத்து கடந்த 2018-ல் அந்த ஸ்பா மூடப்பட்டது. தற்போது ஸ்பா உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேம்பயர் ஃபேஷியல் மூலம் தான் 3 பெண்களுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த ஸ்பாவில் சிகிச்சை பெற்று கொண்ட மற்றவர்களும் பரிசோதனை செய்த கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் அந்த நோய் என்பது வேம்பயர் ஃபேஷியல் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட ஊசி மூலம் தான் பரவி இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தி இருப்பதாலேயே இந்த பிரச்சனை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

From around the web