அமெரிக்க அதிபர் தேர்தல்.. கொலராடோவை தொடர்ந்து மைனே மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடை!
கொலராடோ மாகாணத்தை தொடர்ந்து மைனே மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சான்றிதழ் அளிக்கப்படும்போது, டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாநில கோர்ட்டு டிரம்பை தகுதிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது. அத்துடன், கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் டிரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மைனே வெளியுறவுத்துறை அமைச்சர் ஷென்னா பெல்லோஸ் கூறும்போது, “குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாநிலத்தில் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. நாடாளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் நிகழ்ந்துள்ளன” என்றார்.
Secretary of State Shenna Bellows issued this decision regarding three challenges brought by Maine voters to the nomination petitions of Donald J. Trump for the Republican primary for the President of the United States. Read the decision here: https://t.co/dCwJsC6HN9
— MaineSOS (@MESecOfState) December 28, 2023
டிரம்ப் போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதை நாட்டின் உச்சநீதிமன்றம் முடிவு செய்ய உள்ள நிலையில், மைனே மாநிலம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது பிரச்சார பிரிவு செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.