அட... ட்ரம்ப் பொய் சொல்லிட்டாரா? 21 மில்லியன் டாலர் இந்தியத் தேர்தலுக்கு இல்லையா?

 
Modi Trump

இந்தியாவில் வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதை ஊக்குவிப்பதற்காக அமெரிக்கா 21 மில்லியன் டாலர்கள் செலவு செய்ததாகவும் அதை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது, காங்கிரஸ் கட்சி தான் முந்தைய அமெரிக்க அரசுடன் கூட்டு சேர்ந்து பிரதமர் மோடியை தோற்கடிக்க சதி செய்தது என்று பாஜகவினர் குற்றம் சாட்டினர்.

அந்த 21 மில்லியன் டாலர்கள் எந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது, எப்படி செலவு செய்யப்பட்டது என்று வெள்ளை அறிக்கை வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியது. இந்நிலையில் அந்த 21 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு செலவு செய்தது உண்மை தான். ஆனால் இந்தியத் தேர்தலுக்கு அல்ல, பக்கத்து நாடான பங்களாதேஷில் தான் அந்த செலவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

USAID அமெரிக்க அமைப்பின் அரசியல் ஆலோசகராக பணியாற்றும் லுபியன் மசும் என்பவர் தன்னுடைய லிங்க்ட் இன் பக்கத்தில் ஒரு பதிவை இரண்டு மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டிருக்கிறார். அதில் தேசிய ஜனநாயக நிறுவனத்தின் உதவியுடன் பங்களாதேஷ் நாட்டின் தேர்தல் பணிகளுக்காக 21 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்தோம், தேசிய ஜனநாயக அமைப்புக்கு பங்களாதேஷ் நாட்டில் நேரடி அலுவலகம் இல்லாததால் IRI ம்ற்றும் IFES அமைப்புகளுடன் இணைந்தே அங்கே பணியாற்றுகிறது. இதன் மூலம் CEPPS/Nagorik project. திட்டத்திற்காக USAID 21 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர்கள்,கொடுக்கப்பட்டது கையூட்டு (kickback) என்று கூறியுள்ளார். பங்களாதேஷ்க்கு 29 மில்லியன் டாலர்கள் தேர்தலுக்காக செலவிடப்பட்டுள்ளது என்றும் அதிபர் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். ஆக, அதிபர் ட்ரம்ப் கணக்குப் படி 21 மில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு 29 மில்லியன் டாலர்கள் பங்களாதேஷ்க்கு அமெரிக்கா செலவழித்துள்ளது. ஆனால் USAID அமைப்பின் அரசியல் ஆலோசகர் 21 மில்லியன் டாலர் பங்களாதேஷ் நாட்டில் செலவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அதிபர் ட்ரம்பின் 21 மில்லியன் டாலர் தேர்தல் பணம் பேச்சு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. எது உண்மை என்பது எப்போது வெளிச்சத்துக்கு வரும்?

 

From around the web