அமெரிக்காவில் 2 பெண்கள் கொடூர கொலை.. ‘டெட்பூல் கில்லர்’ வேட் வில்சனுக்கு மரண தண்டனை!
அமெரிக்காவில் 2 பெண்களை திட்டமிட்டு கொடூரமான வகையில் கொலை செய்த வழக்கில் வேட் வில்சனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் வேடு வில்சன். டெட்பூல் கில்லர் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் வேடு வில்சன். தனது பெயரும் அதே என்பதால் தன்னை டெட்பூல் கில்லராக சித்தரித்துக் கொண்டார். அத்துடன் தனது உடலில் டெட்பூல் கில்லர் என பச்சைக்குத்தியுள்ளார். வில்சன் முதலில் மெல்டன் என்ற பெண்ணை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதற்கு முன் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டு உடலுறவு வைத்துள்ளனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட கிறிஸ்டைன் மெல்டனில் (35) காரை திருடிக் கொண்டு, அவரது போனை பயன்படுத்தி தனது பெண் தோழியான மெலிஸ்சா மோன்டனேஸ்-க்கு (41) போன் செய்துள்ளார். அவர் வில்சனை நம்பி வர, பெண் தோழியை அடித்து உதைத்துள்ளார். மேலும் காரில் ஏற வற்புறுத்தியுள்ளார். ஆனால் மெலிஸ்சா மோன்டனேஸ் காரில் ஏற மறுத்து விட்டார்.
இதனால் வில்சன் காரை எடுத்து புறப்பட்டார். கேப் கோரல் பகுதிக்கு செல்லும்போது சாலையில் ரூய்ஸ் என்ற பெண் காரை மறித்து உதவி கேட்டுள்ளார். அவரை காரில் ஏற்றிய வில்சன், கார் கொஞ்ச தூரம் சென்றபின், அவரையும் கழுத்தை நெரித்து காரில் இருந்து வெளியே தள்ளியுள்ளார். இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்யும்வரை காரை திரும்ப திரும்ப அவர் மீது ஏற்றியுள்ளார். இதெல்லாம் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த கொலையெல்லாம் திட்டமிட்டு வேண்டுமென்றே கொலை செய்ததாக அரசு தரப்பில் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விசாரணை மூலம் தெரிய வந்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வில்சனுக்கு மரண தண்டனை வழங்கியது. மரண தண்டனை வழங்கும்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வில்சன், எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாத வகையில் அமைதியாக நின்றிருந்தார்.
இதற்கிடையே சிறையில் வில்சன் இருந்தபோது அவருக்கு ஆயிரக்கணக்கான காதல் கடிதங்கள் வந்துள்ளன. வில்சனின் வளர்ப்பு பெற்றோர், நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கக் கூடாது என கெஞ்சினர். ஆனால் நீதிமன்றம் கோரிக்கை ஏற்றுக் கொள்வில்லை.