எல்லை தாண்டிய 2 பேர் சுட்டுக் கொலை.. அல்ஜீரிய கடலோர காவல்படை அதிரடி.. ஜெட் ஸ்கீயிங் செய்தபோது சோகம்!

மொராக்கோவில் உள்ள கடற்பகுதியில், ஜெட் ஸ்கீயிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தரைக்கடல் நாடான மொராக்கோவின் சைடியாவில் உள்ள கடற்பகுதியில், ஜெட் ஸ்கீயிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டில் சிலர் ஈடுபட்டனர். கடற்கரை ரிசாட்டில் இருந்து புறப்பட்டு ஜெட் ஸ்கீயிங் பயிற்சியில் ஈடுபட்ட அவர்கள் வழிதவறி அண்டைநாடான அல்ஜீரிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.
அப்போது அவர்களை நோக்கி அல்ஜீரிய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் பிலால் கிஸ்ஸி மற்றும் அப்தெலாலி மெர்சவுர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்மெயில் ஸ்னேப் என்பவர் கைது செய்யப்பட்டார். இறந்துபோனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர் என மூன்றுபேரும் பிரான்ஸ்-மொராக்கோ இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உயிரிழந்த பிலால் கிஸ்ஸியின் சகோதரர் முகமது கிஸ்ஸி கூறுகையில், “நாங்கள் கடற்பகுதியில் வழிதவறி தொலைந்து போனோம். ஆனால் அல்ஜீரியாவில் எங்களைக் கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து முன்னேறி சென்றோம். எங்களின் எரிபொருள் தீர்ந்துவிட்டது. கருப்பு நிற அல்ஜீரிய ரப்பர் படகு எங்களை நோக்கி வந்தததை வைத்து நாங்கள் அல்ஜீரியாவிற்குள் வந்துவிட்டதை அறிந்து கொண்டோம்.
ஆனால் அந்த படகில் வந்தவர்கள் எங்களை நோக்கி திடீரெ துப்பாக்கியால் சுட்டனர். இதில் என் சகோதரரும், நண்பரும் இறந்துவிட்டனர். ஒரு நண்பரை கைது செய்துவிட்டனர். அதிர்ஷ்டவசமாக நான் தப்பினேன்” என்றார்.
🔴 Les funérailles, à Bni Drar, de Bilal Kaissi, l’une des deux victimes tuées par des tirs des garde-côtes algériens pic.twitter.com/JzlG19ZXqg
— Le360 (@Le360fr) August 31, 2023
அல்ஜீரியாவிற்கும் மொராக்கோவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதியான மேற்கு சஹாரா தொடர்பான மோதலுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.