10 வருடங்கள் கழித்து பிறந்த இரட்டைக் குழந்தை.. போரில் பறிகொடுத்த தாய்..!

 
Gaza

பாலஸ்தீன பெண் ஒருவர் திருமணமாகி 10 வருடங்கள் கழித்து போருக்கு மத்தியில் பிறந்த இரட்டைக் குழந்தைகளை இஸ்ரேல் தாக்குதலில் பறிகொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.  இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29 ஆயிரத்து 092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது.  உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

baby

இந்த போர் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளான வெசம் மற்றும் நயீம் அபு அன்சா, ரஃபாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஒரு பெண் மற்றும் ஆணுமாகப் பிறந்த இந்த இரட்டையர்களின் பிஞ்சு உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

பிறந்து சில வாரங்களே ஆன இந்தக் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். ராஃபாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஒரே இரவில் இந்தக் குடும்பம் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

Gaza

குழந்தைகளின் தாயார் ராணியா அபு அன்சா, ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கின் போது, ​​வெள்ளைத் துணியில் சுற்றிவைக்கப்பட்டிருந்த தனது குழந்தையை, கன்னத்தோடு அணைத்துக்கொண்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

From around the web